Sunday 16 September 2018

நான் நேசிக்கும் தேவன் இயேசு பாடல் உருவான வரலாறு

பாடல் உருவான வரலாறு :

பாடல் : நான் நேசிக்கும் தேவன் இயேசு

ஆசிரியர் : கடையனோடை  I. பாக்கியநாதன்.

வரலாறு :
                  இப்பாடலை எழுதிய சகோதரன் கடையனோடை I. பாக்கியநாதன். 07.08.1945 அன்று, திரு. A. P. S. ஐயாத்துரைக்கும், எமி அம்மாளுக்கும் மைந்தனாகப் பிறந்தார். பக்தியுள்ள குடும்பமானதால், சிறுவயதிலேயே காலை  மாலை ஆலய ஆராதனைகளுக்கு ஒழுங்காக செல்வார். வேத பாடத் தேர்வுகளில் பரிசுகளும் பெற்றார். ஆரம்பக் கல்வியை தன் சொந்த ஊரான கடையனோடையிலும், உயர்நிலைக் கல்வியை நாசரேத் மர்காஷியஸ் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.  பின்னர் பாளையங்கோட்டை பிஷப் சார்ஜென்ட் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் 1951- 1953 வரை படித்து முடித்தார்.
                     பாக்கியநாதன் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்புப் படிக்கும் போதே, 'கடம்' வாசிக்கவும், பின்பு தபேலா வாசிக்கவும்,  ஆசிரியர் பயிற்சிக் காலத்தில் ஆர்மோனியம் வாசிக்கவும் தாமாகவே கற்றுக்கொண்டார்.
            11.11.1970 அன்று கோகிலம் ஜேன் என்ற ஆசிரியையை மணம்புரிந்தார். ஒரு முறை அவர் மனைவி திடீரென சுகவீனம் அடைந்தார். காய்ச்சல் வந்தது. மாத்திரைகள் கொடுத்து மூன்று நாட்கள் ஆகியும் காய்ச்சல் விடவேயில்லை. மிகவும் மெலிந்து போனார். கடையனோடையிலிருந்த மருத்துவரிடம் சென்றார்கள். பரிசோதனை நடத்திய அவர், பாக்கியநாதனைத்  தனியாக அழைத்து," சார், படித்தும் அறிவில்லாமல் இருந்திருக்கிறீர்களே!  உங்கள் மனைவிக்கு  T. B வியாதி முற்றிவிட்டது. திருநெல்வேலி அல்லது தூத்துக்குடியிலுள்ள பெரிய மருத்துவமனைகளுக்கு உடனே அழைத்துச் செல்லுங்கள் " என்றார். பயங்கரமான அதிர்ச்சியில், செய்வதறியாது திகைத்துப் போன பாக்கியநாதன், தன் மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்.
                 பாக்கியநாதன் சோர்வுடன், சேகர குருவான அருள்திரு. சாலமோன் ஐயரிடம் சென்றார். விபரத்தைச் சொல்லி, தூத்துக்குடிக்கு மனைவியை அழைத்துச் செல்ல,  தனது சம்பளத்தில் முன்பணமாக இருநூறு ரூபாய் கேட்டார். போதகர் தன்னிடம் அப்போது பணமில்லாததால்," பாக்கியநாதன், நாம் இன்று இரவு நன்றாக ஜெபிப்போம். கர்த்தர் நமக்கு உதவி செய்வார் " என்று கூறி,  அவரை அனுப்பி விட்டார்.
                அன்றிரவு, ஜேன் காய்ச்சலின் அகோரத்தில், முனங்கிக்கொண்டே தூங்கிக்  கொண்டிருந்தார். இரவு 10 மணிக்கு மேல், பாக்கியநாதன் தன் மனைவி படுத்திருந்த கட்டிலின் அருகே முழங்கால்படியிட்டு பரம தகப்பனை நோக்கி ஜெபிக்க ஆரம்பித்தார். "தகப்பனே நான் உம்மைத் துதித்து பாடுகிற உம்முடைய பிள்ளை. கதாகாலட்சேபம் மூலம் உம்முடைய நாமத்தை ஊர்ஊராக சென்று மகிமைப் படுத்தி வருகிறேன். எனக்கு இப்படி ஒரு சோதனையா? என் மனைவிக்கு இப்படியொரு கொடிய வியாதியா?  ஆண்டவரே நீர் நினைத்தால் ஒரு நொடியில் இந்த வியாதியை நீக்க முடியும். என் வாழ்விலும் ஏன் நீர் அற்புதம் செய்யக்கூடாது.?" என்று கண்ணீர்விட்டு ஜெபித்தார். இவ்வாறு இரவு 12 மணி வரை ஜெபித்துவிட்டுப் படுக்கைக்குச் சென்றார். "இனி இயேசு ப் பார்த்துக் கொள்வார் " என்ற விசுவாசத்தோடு தூங்கிவிட்டார்.
                     மறுநாள் அதிகாலை சுமார் ஐந்து மணி இருக்கும். பாக்கியநாதனின் வீட்டுக்கதவு தட்டப்பட்டது. சத்தம் கேட்டு விழித்த பாக்கியநாதன் கதவைத் திறந்தார். போதகர் சாலமோன் நின்றுகொண்டிருந்தார். "பாக்கியநாதன் டீச்சர் எப்படி இருக்காங்க? " என்றார். "ஐயா காய்ச்சல் விடவேயில்லை " என்றார் பாக்கியநாதன்.  உடனே போதகர் "சுகமாகிவிடும். நேற்று இரவு பத்து மணிக்கு நெல்விற்ற காணிக்கைப் பணம் வந்தது. இந்தாங்க. " என்று கூறி, இருநூறு ரூபாயைப் பாக்கியநாதனிடம் கொடுத்தார். மீண்டும், நான் இரவு வெகுநேரம் ஜெபித்திருக்கிறேன். ஆண்டவர் அற்புதம் செய்வார் " என்று கூறி ஜெபித்துவிட்டுச் சென்றார்.
                   காலை சுமார் 11 மணியளவில் தூத்துக்குடிக்குச் சென்றனர். அவர்களுக்கு பழக்கமான டாக்டர். திருமதி. பிரேமா பாலச்சந்திரனிடம் விபரத்தைக் கூறினார். டாக்டர் அவர்களை ஆறுதல் படுத்தி, ரத்த சோதனை,  எக்ஸ்ரே முதலியவை எடுக்க ஏற்பாடு செய்தார். "சோதனைகளின் முடிவுகள் வர காலதாமதம் ஆகும். ஆகவே நீங்கள் சாப்பிட்டுவிட்டு,  மதியம் 3 மணிக்கு வாருங்கள் " என்றார்.அதன்படி மாலை 3 மணிக்கு மீண்டும் டாக்டரிடம் வந்தனர்.
                  எல்லா சோதனைகளின் முடிவுகளையும் பார்த்த டாக்டர், பாக்கியநாதனை பார்த்து " உங்கள் மனைவிக்கு T. B  வியாதி என்று யார் கூறியது?  அந்த வியாதிக்கான எந்த அடையாளமும் இல்லையே! இது வெறும் சளிக்காய்ச்சல் தான். வேறொன்றுமில்லை ". என்று கூறி ஊசி போட்டு மாத்திரைத் தந்தார். பாக்கியநாதனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
                  அப்படியானால் இந்த ஒரு நாள் இடைவெளியில் நடந்தது என்ன என்று அவர் சிந்திக்க ஆரம்பித்தார். என் தேவன் இயேசு கிறிஸ்து தான் என் ஜெபத்தைக்கேட்டு அற்புதம் செய்திருக்கிறார் என்று விசுவாசத்தோடு வீடு திரும்பினார். ஊர் திரும்புவதற்குள் ஜேனின் காய்ச்சல் மாயமாய் மறைந்து போனது. பாக்கியநாதன் போதகரிடம் சென்று, "ஐயா இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார் என்பதை என் வாழ்க்கையில் நிரூபித்து விட்டார்! " என்று ஆனந்தக் கண்ணீருடன் கூறினார்.
                      இரவு பத்து மணிக்கு மேல் பாக்கிய நாதனின் வீட்டில் அனைவரும் தூங்கியபின் தன் வாழ்விலே அற்புதம் செய்த ஆண்டவருக்கு நன்றி செலுத்த பாக்கியநாதன் விரும்பினார். " காணிக்கை செலுத்த பொன்னுமில்லை,  பொருளுமில்லை. ஆனால் அவர் தந்த தாலந்தாகிய பாட்டெழுதி ராகம் அமைக்கும் வரமிருக்கிறதே" என எண்ணியவராய், வழக்கம்போல சமையலறைக்குச் சென்றார். பாடலும் ராகமும் வர ஆரம்பித்தன. அவர் எழுதினார் :
      "நான் நேசிக்கும் தேவன் இயேசு என்றும் ஜீவிக்கிறார் அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் "
                    இந்தப்பாடல் அவருக்கு மட்டுமல்ல அநேகருக்கு சாட்சிப் பாடலாக அமைந்து, அநேகரை விசுவாசத்தில் உறுதிப்படுத்தியது.
              இப்பாடல், சகோதரன்  A. J. சத்தியாவின் இன்ப இசையில், சகோதரி திருமதி. ஹெலன் சத்தியாவின் பசுமையான மென்குரலில் இசைத்தட்டில் முதன்முறையாக வெளிவந்தது..
                நம்முடைய வாழ்விலும் ஆண்டவர் ஜீவிக்கிறார் என்பதை ஒவ்வொரு நாளும் உறுதிபடுத்தி வருகிறாரே....அதை நினைத்து நாமும் நன்றியோடு வாழுவோம்...

No comments:

Post a Comment