Sunday 14 July 2019

*கல்லிடைக்குறிச்சியும் ஸ்தோத்திரப்பண்டிகைகளும் (கூட்டமும்)*

நெல்லை அப்போஸ்தலர் கனம்.ரேனியஸ் ஐயரவர்களால் 1828 ல் உருவாக்கப்பட்டு அன்னாரது மேற்பார்வையின் கீழ் 1835 வரை இருந்த கல்லிடைக்குறிச்சி சபை 1835 க்குப் பின் பாளையங்கோட்டை CMS மிஷனரி கனம்.பெற்றிட் ஐயரவர்களின் (1835 - 37) மேற்பார்வையின் கீழ் வந்தது. அதன்பின் டோனாவூர் வட்டார CMS தலைமைமிஷனரிகளான
கனம்.எட்வர்ட் டென்ற் (1837 - 49)
கனம்.சார்லஸ் ரேனியஸ் (1849 - 50)
கனம்.ஜேசுதாசன்ஜான் (1851)
கனம்.தாமஸ் ஃபோக்ஸ் (1852 - 55)
கனம்.ஸ்டீபன் ஹாப்ஸ் (1854 - 56)
கனம்.தேவசகாம் ஞானமுத்து (1856 - 57)
கனம்.ஆஷ்டன் டிப் (1857 - 58) ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் கல்லிடைக்குறிச்சி சபை வந்தது.
1858 முதல் 1878 வரை 20 ஆண்டுகளாக டோனாவூர் CMS சர்க்கிளுக்குட்பட்ட துணைவட்டமாக இருந்த இடையன்குளம் மிஷன் குருவானவரின் மேற்பார்வையின் கீழ்  கல்லிடைக்குறிச்சி இருந்தது.
கல்லிடைக்குறிச்சி சபையின் தொடக்ககால ஞானஸ்நானங்கள் டோனாவூர், இடையன்குளம் மிஷன் குருவானவரால் கொடுக்கப்பட்டிருப்பதை ஞானஸ்நானப் பதிவேடுகள் மூலம் அறியமுடிகிறது. இக்காலங்களில் ஸ்தோத்திரப்பண்டிகைகள் CMS சர்க்கிள்களில் தொடங்கப்படவில்லை. 1878 ல் அம்பாசமுத்திரம் சேகரத்திற்கென முதல் குருவானவராக கனம்.தேவப்பிரசாதம் ஐயரவர்கள்  நியமிக்கப்பட்டவுடன் டோனாவூர் சர்க்கிள் இடையன்குளத்தின் கீழ் இருந்த கல்லிடைக்குறிச்சி சபை நல்லூர் சர்க்கிள் அம்பாசமுத்திரத்துடன் சேர்க்கப்பட்டது
இந்நிலையில் CMS சர்க்கிள் தலைமையிடங்களில் ஸ்தோத்திரப்பண்டிகைகளை CMS மிஷனரிமார் தொடங்கினர்.
1892 ல் நல்லூரிலும் 1894 ல் டோனாவூரிலும்
1902 ல் இடையன்குளத்திலும் ஸ்தோத்திரப்பண்டிகைகள் தொடங்கப்பட்டபோது சர்க்கிள் பண்டிகை என்ற முறையில் *நல்லூருக்கும்* நீண்டகாலத் தொடர்பு, உறவுமுறைத் தொடர்புகள் காரணமாக *டோனாவூர் மற்றும் இடையன்குளத்திற்கும்* ஸ்தோத்திரப்பண்டிகைக்காக கல்லிடைக்குறிச்சி சபைமக்கள் சென்று வந்தனர்.
நல்லூர் சர்க்கிளில் இருந்து புதிதாக அம்பாசமுத்திரம் சர்க்கிள் உருவாக்கப்பட்டபோது அம்பாசமுத்திரம் சர்க்கிளுக்கான ஸ்தோத்திரப்பண்டிகை *கடையத்தில்* தொடங்கப்பட்டது. ஸ்தோத்திரப்பண்டிகை கொண்டாட கல்லிடைக்குறிச்சி சபைமக்கள் கடையம் சென்று வந்தனர். இந்நிலையில் *1970 ஆகஸ்டு இரண்டாவது வாரம் வெள்ளி சனி ஞாயிறில்* அம்பாசமுத்திரம் சேகரத்திற்கான ஸ்தோத்திரப்பண்டிகை *கல்லிடைக்குறிச்சி CSI கிறிஸ்து ஆலய வளாகத்தில்* தொடங்கப்பட்டது
36 ஆண்டுகளாக அம்பாசமுத்திரம் சேகர பண்டிகையாகவும் பின் 13 ஆண்டுகளாக புதிய கல்லிடைக்குறிச்சி சேகர ஸ்தோத்திரப்பண்டிகையாகவும் கல்லிடைக்குறிச்சி தேவாலய வளாகத்தில் பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்டில் கொண்டாடப்படுவது கல்லிடைக்குறிச்சி தேவாலய வளாகத்தில் கொண்டாடப்படுகிற *50 ஆவது பண்டிகை*
*(பொன்விழா பண்டிகை* - *Golden Jubilee)* ஆகும்.
*(ஜா.ஜான்ஞானராஜ் கல்லிடைக்குறிச்சி)*

*திருநெல்வேலி திருமண்டலத்தின் தூண் : கார் மிஷனரி -Rev.E.S.Carr M.A. (1864 -1954)*


1897 முதல் 1915 வரை மாவட்ட சர்ச் கவுன்சில் தலைவர் எனும் உயர்ந்த பொறுப்பில் இருந்து சீரியபணியாற்றியவர் கார் மிஷனரி அக்கால திருமண்டல நிர்வாகத் தலைவராக இப்பதவி இருந்தது. இவரது பணிக்காலத்தில் தான் பெரும்பாலான CMS தேவாலயங்களுக்கும் CMS பள்ளிகளுக்கும் சொந்த இடங்கள் வாங்கப்பட்டன. கிரயமாக வாங்கிய இடங்களை Sale Deed என்ற தலைப்பிலும் நன்கொடையாகப் பெற்ற இடங்களை Gift Deed என்ற தலைப்பிலும் சொத்து பதிவேட்டில் சிறப்பாக வகைப்படுத்தி அதன் முழுவிபரங்களையும் அதில் பதிவுசெய்தார்.
திருநெல்வேலி திருமண்டல CMS தேவாலயம் பள்ளிகளின் சொத்து பதிவேடான CMS Tinnevelly Documents என்ற பதிவேட்டில் கார் மிஷனரி அவர்களது பெயரும் கையெழுத்தும் மிகஅதிகமாக இடம் பெற்றிருப்பதை இன்றளவும் பார்க்கலாம். இவர் 1897 ல் DistrictChurchCouncil Chairman ஆகப் பதவியேற்றபோது சபைநீக்குதல்கள், மாறுதல்கள் என சிக்கலான நிலை திருமண்டலத்தில் நிலவியது. அந்நேரம் கிறிஸ்தவ இரக்கத்தை வெளிப்படுத்தி திறமையுடன் செயல்பட்டு திருச்சபையைப் பலப்படுத்தினார். இவரது பணிக்காலத்தில் தான் நெல்லை திருமண்டல பள்ளிகளுக்கான சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டது.1899 ல் நடந்த CMS நூற்றாண்டு விழாவிலும்
1901 ல் நடந்த SPG இருநூற்றாண்டு விழாவிலும் முக்கியப் பங்காற்றினார்.
எட்மன்ட் ஸ்டைல்மன் கார் என்ற முழு பெயரைக் கொண்ட கார் மிஷனரி இங்கிலாந்திலுள்ள காஸ்டல்மன் நகரில் 06.04.1864 ல் பிறந்தார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் திரித்துவக் கல்லூரியில் M.A.பட்டம் பெற்றார். குருத்துவக்கல்வி கற்று ஆங்கிலிகன் திருச்சபை முறைப்படி 1887 ல் உதவிகுருப் பட்டம் பெற்று CMS மிஷனரியாக 1887 ல் பாளைக்கு வந்து சேர்ந்தார்.1887 முதல் 1890 வரை நற்போதக ஆசிரியராக பேராயர்.சார்ஜென்ற், கனம்.கெம்பர், கனம்.உவாக்கர் ஆகியோரோடு இணைந்து பணிசெய்தார்.1890 ல் சென்னையில் குருப்பட்டம் பெற்றார். மனைவியின் சுகவீனத்தால் இங்கிலாந்து சென்றார்.சிகிச்சை பலனின்றி மனைவி மரணமடையவே தனிமையாக  கார் மிஷனரி 1891 நவம்பரில் சென்னை திரும்பினார். 22.9.1903 ல் மிஸ்.கிளேர் டி வாக்கரைத் திருமணம் செய்தார் இருவரும் இணைந்து சிறப்புற ஊழியம் செய்தனர்.முரட்டு மீசை, கெம்பீரதோற்றம், சிறந்த தமிழ் உச்சரிப்பு கொண்ட கார் மிஷனரி சபையாரின் தேவையை அறிந்து அதை நிறைவேற்றுபவர் சபையாரிடம் அதிக அன்புகாட்டுபவர்.
புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்த மேல்நெல்லை சபைகளை அதிகம் நேசித்தவர்.
கார் மிஷனரியால் அதிகமாக நேசிக்கப்பட்ட சபைகளில் கல்லிடைக்குறிச்சி சபையும் அதிலிருந்து தனிச்சபையாக 1910 ல் உருவான தெற்கு பாப்பான்குளம் சபையும் முக்கியமானதாகும்.
இவ்விரு சபைகளிலும் தேவாலயம் கட்ட நிலம் வாங்கி சிறப்பானதோர் தேவாலயம் கட்டப்பட மூலகாரணம் ஆக கார் மிஷனரி செயல்பட்டார். கல்லிடைக்குறிச்சி சபை 40 குடும்பத்தினரையும் சுமார் 200 அங்கத்தினரையும் கொண்டதாக  இருக்கும்போது 500 பேர் அமர்ந்து ஆராதிக்கும் பெரிதானதோர் தேவாலயத்தை கார் மிஷனரி கட்டியெழுப்பினார் அதன் தூண்கள் பலமுறை சரிந்துவிழுந்தபோது சோர்படையாமல் உயர்அதிகாரிகளின் ஹண்டர்,  மன்றோ (ரயில்வே) தொழில்நுட்பஉதவி பெற்று அவற்றை நிலைப்படுத்தினார். தெற்குபாப்பான்குளத்தில் அஸ்திபாரத்திற்கு மேல் தேவாலயம் எழும்பாதபடிக்கு தடை செய்த சிங்கம்பட்டி ஜமீன்தாரிடம் நேரில் சென்று பேசி ஜமீன்தாரே தேவாலயப்பணிக்கு பனங்கம்புகளும் ஓடுகளும் தரும் அளவிற்கு அவரிடம் மாறுதலை கார் மிஷனரி உருவாக்கினார். இவ்விரு ஊர் சபையார் தம் திருச்சபையின் தந்தையாக இவரைப் போற்றுகின்றனர்.
1915 ல் இங்கிலாந்து சென்ற கார் மிஷனரி 1918 ல் CMS ல் இருந்து ஓய்வு பெற்று அங்கு பிற ஊழியங்களில் ஈடுபட்டார். 12.06.1954 ல் தம் 90 ஆம் வயதில் கர்த்தருக்குள் நித்தரையடைந்தார்.

நெல்லை அப்போஸ்தலனுக்கு *சார்லஸ் தியோஃபிலஸ் எவால்ட் ரேனியஸ்* (1790-1838)

*பிறந்த நாள்* (Nov-04)

=============================

🔥 பிறந்த நாடு - இப்பொழுது உலக வரைபடத்தில் இல்லாத பிரஷ்யா.

🔥 தாய் மொழி - ஜெர்மனி.

🔥வானுயர ஊசி கோபுரத்தைக் கட்டிய "நாயகன்"😇

🔥மென்மையான தன் வெள்ளைக் கால்களால் தேரிக்காடு, கல்ரோடு எங்கும் இரவு பகலாக நடந்து  371 சபைகளைத் தோற்றுவித்த "தங்கம்"😇

🔥திருநெல்வேலி முழுவதும் 200 பள்ளிகளை நிறுவி பாளையங்கோட்டையை Oxford City ஆக மாற்றின "மேதை"😇

🔥திருநெல்வேலி மாவட்டம் முழுதும் நற்செய்தி பரப்பிய "கடவுளின் தொண்டன்"😇

🔥இந்தியாவிற்கு இளம் வயதில் வந்து, வாழ்நாள் முழுவதும் இங்கேயே தங்கி ஊழியம் செய்து, தன் தாயைப் பாா்க்க ஒரு முறை கூட தாயகம் திரும்பாத "தியாகி"!!

🔥 1814 இல் சென்னை வந்து அங்கு ஆறு ஆண்டுகள் பணியாற்றியவர்.

🔥 1820 -1838 வரை 18 ஆண்டுகள் திருநெல்வேலி வாழ்க்கை.

🔥 நெல்லைச் சீமையில் இவர் நிறுவிய திருச்சபைகள் 371.

🔥 நிறுவிய பள்ளிகள் 107.

🔥 திருநெல்வேலி மண்ணிலே விதைக்கப்பட்டவர். இவரது கல்லறை பேசும் சாட்சியாக முருகன் குறிச்சியில் உள்ளது.

🔥 பள்ளிகளுக்குத் தேவையான ஆசிரியர்களை உருவாக்க ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், பாடத்திட்டங்களுக்கு தேவையான புத்தங்களை உருவாக்குதல், பள்ளி நடத்த திருச்சபைகள் மூலம் நிதி திரட்டுதல் என கல்வியை வெகுசன இயக்கமாக, தமிழ் வழிக் கல்வியாக முன்னெடுத்தவர்.

🔥 திண்ணை பள்ளிகளில் மேட்டுக் குடிகளிடம் முடங்கிக் கிடந்த "கல்வி என்னும் அறிவாயுதத்தை" சாமானியர்களுக்கும் சாத்தியமாக்கியவர்.

🔥 மெய்ஞ்ஞானபுரம், டோனாவூர், நல்லூர், சுரண்டை, சாந்தபுரம், பாவநாசபுரம், நேசபுரம், நலலம்மாள்புரம், இரட்சணியபுரம், சௌக்கியபுரம், தர்மநகரம், நாயினூர், விசுவாசபுரம், சந்தோஷபுரம், அனுக்கிரகபுரம், சீயோன் மலை, இடையன்குளம், ஆசிர்வாதபுரம் என ஏராளமான ஊர்களை உருவாக்கியவர்.

🔥 முகவை இராமானுஜக் கவிராயரிடம் தமிழில் நன்னூல் போன்ற இலக்கண நூல்களை முறையாகக் கற்றுத் தெளிந்தவர். பின்பு திருப்பாற்கடல்நாதன் கவிராயர் என்னும் தமிழ் அறிஞரிடம் 14 வருடங்கள் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றவர். இயல்பாகவே இனிமையாகப் பேசக்கூடிய இவர், தமிழையும் சிறப்பாகப் பேசக்கூடியவர்.

🔥 துண்டு பிரசுர சங்கத்தை சென்னையிலும், நெல்லையிலும் நிறுவியவர் (Madras Tract and Religious Book Society).

🔥 ஒருநாள் வருமான காணிக்கை படைத்தல், கைப்பிடி அரிசி காணிக்கை, ஆலய பரிபாலன நிதி திட்டம் (Local Church Fund) போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியவர்.

🔥 “தரும சங்கம்” என்ற பெயரால் ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் பாடசாலைகள், வீடுகள், ஆலயங்கள் கட்டுவதற்கு நிலம் வாங்கிக் கொடுத்தவர்.

🔥 "விதவைகளின் ஆதரிப்புச் சங்கம்” நிறுவி, அதன் மூலம் உபதேசியார்களின் விதவை மனைவிகளுக்கு ஜீவனாம்சம் கொடுத்து வர ஏற்பாடு செய்தவர்.

🔥 கிறிஸ்தவர்களாக மாறிய சில இந்து குடும்பத்தினர், அவர்களுடைய பழக்கத்தின் காரணமாகத் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் குரங்கணி கொடைவிழாவில் கலந்து கொள்வதைத் தடுப்பதற்காக, பாளையங்கோட்டையில் 1834 ஆம் ஆண்டு சூலை 9 அன்று மாம்பழச் சங்கத்தை ஆரம்பித்தார். இதன் மூலம் திருமண்டலத்தில் அனைத்து சபைகளையும் ஒருங்கிணைக்கின்ற தோத்திரப் பண்டிகையாக வருடந்தோறும் பாளையங்கோட்டை, நூற்றாண்டு மண்டபத்தில் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

🔥 சென்னை வேதாகம சங்கம் 1817, நவம்பர் 5 இல் இவரது பெரு முயற்சியால் துவங்கப்பட்டது.

🔥 தமிழ் வேதாகமத்தின் மூன்றாவது திருப்புதலை செய்தவர் . புதிய ஏற்பாட்டை முதலில் மொழிபெயர்த்து முடித்தபின், பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம் முதல் தானியேல் வரை மொழி பெயர்த்தார். கூட்டெழுத்து முறையை மாற்றி, வார்த்தைகளுக்கு நடுவில் இடம் விட்டு எழுதும் பழக்கத்தை, முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் இவரே.

🔥 தமிழில் முதல் அறிவியல் நூலை உருவாக்கியவர் (பூமி சாஸ்திரம்).

🔥 சாதிக்கு எதிராக முதல் கல்லை எறிந்து சமூக நீதி யுத்தத்தை துவங்கி வைத்தவர்.

🔥 பெண்களுக்கு பள்ளிக்கூட கதவுகள் நெல்லையில் முதன்முதலில் திறக்கப்பட காரணமாக இருந்த மகான்.

🔥 இவர் துவங்கிய பெண்களுக்கான விடுதிகளுடன் கூடிய சிறப்புப் பள்ளி, இந்தியாவில் துவங்கப்பட்ட பெண்களுக்கான இரண்டாவது பள்ளியாகும். அது இன்றும் மேரி சார்ஜன்ட் மேல்நிலைப் பள்ளியாக நடைபெற்று வருகிறது

🔥 வெங்கு முதலியார் உள்ளிட்ட ஏராளமான மாற்று சமய நல் உள்ளம் படைத்தவர்களோடும் நட்பு பாராட்டியவர்.

🔥 காலரா, பெருவெள்ளம் என இயற்கை பேரிடர்கள் நேரிட்ட போதெல்லாம், தனக்குத் தெரிந்த முதலுதவிகள் மூலம் ஓடோடி உதவிய மனிதாபிமானி.

🔥 தமிழ் இலக்கணம் (A Grammar of the Tamil Language: With Appendix) உள்ளிட்ட நல்ல பல நூல்களைத் தந்தவர்.

🔥 திரள்கூட்ட சுவிசேஷ இயக்கம் (Mass Movement Evangelism) இவரிலிருந்தே இந்தியாவில் துவங்குகிறது.

🔥 நெல்லைக்கு அடையாளமாக விளங்கும் தூய திரித்துவப் பேராலயம் (Holy Trinity Cathedral) எனப்படும் ஊசிக்கோபுர ஆலயம் இவர் கட்டியது.

🔥 'அனைத்து மக்கள் கல்வி’, ‘சமூக நீதி குறித்த புதிய நோக்கு’, எளிமையான வசனத் தமிழ், மொழிபெயர்ப்புக் கலை, அச்சுப் பிரசுரத் தொடர்பு சாதனம் என, தெளிந்த கோட்பாடுகளோடு தென்பாண்டிச் சீமையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றவர்.

🔥 “ 1820 முதல் 1835 வரையிலான ரேனியஸின் வாழ்க்கை வரலாறே, திருநெல்வேலி திருச்சபையின் வரலாறாகும்”

🔥 *“பவுல் அப்போஸ்தலனுக்குப் பிறகு தோன்றிய மிகப் பெரிய மிஷனரி, ரேனியஸ் ஐயர்”* என்று யூத மிஷனரி *டாக்டர் உல்ஃப்* (Dr. Wolf) என்பவர் தெரிவித்துள்ளார்.

🔥 தினமும் நாட்குறிப்பு எழுதும் பழக்கமுடையவர் இவர். தனது சொந்த ஊரிலிருந்து புறப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பிலிருந்து, மரிப்பதற்கு சில தினங்களுக்கு முன் வரை இவர் தன் கைப்பட எழுதிய நாட்குறிப்புகளின் பகுதிகள், கடிதங்கள், அறிக்கைகள் அடிப்படையில் *Memoir of the Rev. C.T.E. Rhenius* எனும் புத்தகம், அவரது மகனால் 1841 இல் வெளியானது.

🔥 இந்த நூல் இப்பொழுது *ரேனியஸ் ஐயரின் நாட்குறிப்புகள்* எனும் பெயரில் மூன்று தொகுதிகளாக தமிழில் வெளியாகிறது. ஏற்கனவே இரண்டு தொகுதிகள் வெளிவந்துவிட்ட நிலையில், அவரின் இந்த பிறந்த நாளான கடந்த 2018 நவம்பர் 5 இல் மூன்றாவது தொகுதி வெளியிடப்பட்டுள்ளது.

*ஆசிர்வதியும் கர்த்தரே-* * *பாடல் பிறந்த கதை*

இப்பாடல் ஒலிக்காத கிறிஸ்தவ திருமணங்களே இல்லை எனலாம். பிரசித்திப் பெற்ற அதே நேரத்தில் அர்த்தச் செறிவுள்ள இப்பாடல் தோன்றிய வரலாறு.

1924 ஆம் ஆண்டிலே, இந்திய மிஷனெரி சங்கத்தின் *(IMS)* முதல் மிஷனெரியும் பல கீர்த்தனைகளை இயற்றியவருமான *அருள்திரு சாமுவேல் பாக்கியநாதன்* ஐயரவர்களின் *மகன் ஆடிட்டர் அசரியா பாக்கியநாதன்* அவர்களுக்கு,  சென்னை தூய எப்பா பள்ளியில் ஆசிரியையாக பணிகொண்டிருந்த *யுனிஸ்* அவர்களை திருமணம் செய்ய நிச்சயக்கப்பட்டது. மணமகளின் தகப்பனார் *அருள்திரு. டி. எஸ்.டேவிட்* ஐயரவர்கள் ஊழியம் செய்துகொண்டிருந்த பண்ணைவிளை ஆலயத்திலே திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. மணமகனின் உறவினர்கள் மருதகுளத்திலிருந்து பண்ணைவிளை வந்திருந்தார்கள்.

திருமணத்திற்கு முந்தைய நாள் மதியம் மணமகனின் உறவினர்கள் பண்ணைவிளை வரும் வழியிலே பெருங்குளத்தில் தங்கி ஓய்வு எடுத்தார்கள். அந்த குளம் உயர்சாதியினர் மட்டுமே குளிக்கக் கூடிய குளம் என்பதை அறியாத அவர்கள் அதில் குளித்தார்கள். இதை அறிந்த அவ்வூரைச் சேர்ந்த உயர்சாதியினர்  மணமகனின் உறவினர்களைச் சூழந்து கொண்டு பிரச்சனை செய்ய ஆரம்பித்தார்கள். அவர்களை விட தாழ்ந்த சாதியினரான மணமகனின் உறவினர் குளித்ததால் குளம் தீட்டுப்பட்டு விட்டதாகவும்,  அதனால் அவர்களின் விக்கிரகங்களை அதில் குளிப்பாட்ட இயலாது என்பதும் அவர்களின் குற்றச்சாட்டு. சிலமணி நேரங்களுக்குப் பிறகு இதைக் கேள்விப்பட்ட உள்ளூர் கிறிஸ்தவர்கள் எப்படியோ மணமகனின் வீட்டாரை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

இச்செய்தி மணமகனின் தந்தை அருள்திரு. சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்கள் காதை எட்டியபோது ஜனங்களின் மனக்கண்கள் சாத்தானால் குருடாக்கப்பட்டிருப்பதை நினைத்து வருந்தினார். வீசிரோ வான ஜோதி கதிரிங்கே (இருளிலே நடக்கிற ஜனங்கள் வெளிச்சத்திலே நடக்கும்படி உம் ஒளியை வீசச் செய்வீராக) என்னும் வரியை மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டிருந்தார். அன்றைய நாள் சாயங்காலத்திலேயே முழுப்பாடலையும் எழுதி மறுநாள் மகனின் திருமணத்தில் பாடினார்கள்.

ஒவ்வொரு முறையும் இப்பாடலைப் பாடும் போது, நம்முடைய வாழ்வின் இருளை நீக்க, உலகின் ஒளியாக வந்த இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற பாரத்துடன் எழுதப்பட்டதை நினைவு கூறுவோம்.

இது சகோதரர் Prason Christopher Robin அவர்களின் ஆங்கில கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.
- R.Stanly Samuel.
🙏🏼

Sunday 13 January 2019

துதித்துப்பாடிட பாத்திரமே… பாடல் பிறந்த கதை

துதித்துப்பாடிட பாத்திரமே
துங்கவன் இயேசுவின் நாமமதேது
திகளின் மத்தியில் வாசம் செய்யும்தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே

………….

இந்தப் பிரபல பாடலை எழுதி, ராகமும் அமைத்து, பல இடங்களில் ஆண்டவரை உற்சாகமாயத் துதித்துப் பாடிவரும் சகோதரி.சாராள் நவரோஜியை, கிறிஸ்தவ சமுதாயமனைத்தும் நன்கு அறியும்.

கடந்த 40 ஆண்டுகளாக, இசைவழி இறைப்பணி செய்துவரும் இச்சகோதரியின் மூலம் கிறிஸ்தவ உலகிற்கு தேவன் அருளிய பாடல்களின் எண்ணிக்கை 361 ஆகும்.

சகோதரி சாராள் நவரோஜி 60 ஆண்டுகளுக்கு முன் ஊழிய வாஞ்சை நிறைந்த பெற்றோருக்குப் பிறந்தார். இவரது தந்தை திரு சாலமோன் ஆசீர்வாதம் ஒரு கர்நாடக இசை மேதையாவார். அவரது முன்னோர் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். மதுரை அழகர் கோவிலில் பாடல்களைப் பாடிவந்தவர்கள். திரு. சாலமோன், சாது சுந்தர்சிங்கின் மூலம் நற்செய்தியை அறிந்து, ஆண்டவரை
ஏற்றுக்கொண்டார்.

அதன் பின்னர், கர்நாடக இசையில் ஆண்டவரைத் துதித்துப் பல பாடல்களை இயற்றிப் பாடினார். லுத்தரன் திருச்சபை
நாட்டையர்களுக்குப் பாடக் கற்றுக் கொடுத்தார். சகோதரியின் தாயார் திருமதி. சவுந்தரம் அம்மையார்
1924-ம் ஆண்டு முதல், வெளிநாட்டு
மிஷனரிச்சகோதரிகளுடன் சேர்ந்து, தென்னகத்தில் சிறுவர் ஊழியத்தை ஆரம்பித்து நடத்திய முன்னோடிச் சிறுவர் மிஷனரியாவார்.

இத்தகைய பெற்றோருக்குப் பிறந்த சகோதரி சாராள், லுத்தரன் திருச்சபையைச் சேர்ந்தவர். பின்னர், தனது
14-வது வயதில், பிரதரன் அசெம்பிளி நடத்திய நற்செய்திக் கூட்டத்தி;ல் இயேசுவைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டார்.

தனது 18-வது வயதிலே, பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்றார். ஆவியானவரின் வழிநடத்துதலின்படி,
1956-ஆம் ஆண்டு முதல், பாடல்களை இயற்றி, ராகமமைத்துப் பாடி, இசைத் தொண்டாற்றி வருகிறார்.

சென்னை மின்சார வாரியத்தில் எழுத்தராகப் பணிபுரிந்த நாட்களில், சகோதரி சாராள், ஆண்டவரின் அழைப்பைப் பெற்றார். எனவே, 1959-ம் ஆண்டு, தனது இருபதாவது வயதில், முழுநேரப் பணிக்குத் தன்னை முற்றிலும் அர்ப்பணித்தார்.

1959 முதல் 1962 வரை இலங்கையில் வேதாகமத்தில் பயிற்சி பெற்று, ஊழியம் செய்தார். பின்னர் தமிழகம் திரும்பி, திருச்சபைகளைச் சந்தித்து, உயிர்மீட்சிக் கூட்டங்களை நடத்தி, ஆவியில் அனல் மூட்டினார்.

சென்னையில், சீயோன் சுவிசேஷ ஜெப ஐக்கிய சபையை ஸ்தாபித்து, தேவ பணியை அருகிலும், தூரத்திலும் உள்ள கிராமங்களில் தொடர்ந்து உத்தமமாய்ச் செய்து வருகிறார்.

மாம்பழச்சங்கப் பண்டிகை

*"கூட்டம்" என அன்புடன் அழைக்கப்படும் ஸ்தோத்திரப் பண்டிகை*

ஸ்தோத்திரப் பண்டிகையின் முன்னோடி பண்டிகையான மாம்பழச்சங்கப் பண்டிகை கனம்.ரேனியஸ் ஐயரவர்களுக்குப் பின் சில ஆண்டுகளாக நடைபெறாமல் நின்றுபோயிருந்தது. 1849 ஆம் ஆண்டு கனம்.ஜார்ஜ் பெற்றிட் ஐயரவர்களால் மீண்டும் புத்துயிர் பெற்றது. இப்பண்டிகையில் படைக்கப்படும் காணிக்கை விதவைப் பெண்கள் பராமரிக்கப்பட பயன்படுத்தப்பட்டது. பழக்கதோஷத்தால் குரங்கணி ஆனித்திருவிழாவிற்கு சென்று வந்த கிறிஸ்தவர்கள் மாம்பழச்சங்கப் பண்டிகைக்குச் செல்ல ஆரம்பித்தனர் கனம்.ரேனியஸ் ஐயரவர்களின் நோக்கம் நிறைவேறியது.
ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் தென்மாவட்டக் கிராமங்களில் கொடைவிழாக்களும் சங்கரன்கோவிலில் ஆடித்தபசு
காரையாரில் ஆடி அமாவாசை என தொடர் விழாக்களில் புறமதத்தினர் ஒன்றுகூடி விழா எடுப்பதைக் கண்டு புதிய கிறிஸ்தவர்கள் பின்வாங்காதபடி தடுக்கவும் பல கிராமக் கிறிஸ்தவர்களை சர்க்கிள் தலைமையிடங்களில் ஒன்றிணைத்து பண்டிகை கொண்டாடவும் CMS மிஷனரிகள் முயற்சி எடுத்தனர்.
முதன்முதலாக தபசஉற்சவம் எனும் ஸ்தோத்திரப் பண்டிகை வடநெல்லை சர்க்கிள் தலைமையிடமான சாட்சியாபுரத்தில் (சிவகாசி) 1891 ல் CMS மிஷனரி கனம்தாமஸ்
உவாக்கர் ஐயரவர்களால் தொடங்கப்பட்டது. இது பின்னர் கூட்டம் என்றழைக்கப்படலாயிற்று.
கீழ்க்கண்ட சர்க்கிள் தலைமையிடங்களில் கீழ்க்கண்ட ஆண்டுகளில் ஸ்தோத்திரப் பண்டிகை தொடங்கப்பட்டது
*1.சாட்சியாபுரம் - 1891*
*2.நல்லூர் - 1892*
*3.மெஞ்ஞானபுரம் - 1893*
*4.டோனாவூர் - 1894*
*5.சுவிசேஷபுரம் - 1894*
*6.பாளையங்கோட்டை - 1895*
*7.சுரண்டை - 1896*
*8.பண்ணைவிளை - 1896*
*9.இடையன்குளம் - 1902*
நல்லூர் சர்க்கிளில் இருந்து அம்பாசமுத்திரம் சர்க்கிள் பிரிந்தவுடன் அம்பாசமுத்திரம் சர்க்கிளுக்கான ஸ்தோத்திரப் பண்டிகை *கடையத்தில்**தொடங்கப்பட்டது. தென்காசி சாந்தபுரம்
புளியங்குடி
பாவூர்சத்திரம் ஆகிய நான்கு சேகரங்கள் ஓருங்கிணைந்து 1944 ல்  *குற்றாலத்தில்* ஸ்தோத்திரப்பண்டிகையைத் தொடங்கினர். அப்பண்டிகை 75 ஆவது ஸ்தோத்திரப்பண்டிகையாக கடந்த வெள்ளி சனி ஞாயிறு நாட்களில் நடைபெற்றது.

✝ சாம் ஜெபத்துரை ✝

தென் தமிழ்நாட்டில் இடையன்குடி என்ற கிராமத்தில் ஜோசப் மற்றும் சவுந்திர மணி 👨‍🏫ஆசிரியப் பெரு மக்களுக்கு மகனாக பிறந்தார்  சாம் ஜெபத்துரை. இடையன்குடியில் தன்னுடைய பள்ளிப்படிப்பை ஆரம்பித்த அவர் தன்னுடைய கல்லூரி படிப்பை சென்ட் ஜான்ஸ் காலேஜ் மற்றும் சென்ட்  சேவியர் காலேஜ் பாளையங்கோட்டையில் பயின்றார். பின்னர் எம்.ஏ. அரசியல் அறிவியல் துறையில் தனது முதுகலை பட்டம் முடித்தார்👨🏻‍🎓 .

அவர் 8 வயதில்🙆‍♂ இருந்தபோது பயங்கரமான போலியோவால் பாதிக்கப்பட்டார். சிகிச்சையின் நீண்ட காலத்திற்குப் பிறகு அவர் சாதாரண ஆரோக்கியத்திற்கு திரும்பினார் ஆனால் இன்று வரை அவரது🚶🏼‍♂ கால்களில் ஒரு கால் மற்றதை விட அளவில் குறைவாக உள்ளது. இதனால் ஆரம்ப காலங்களில் பல அவமானங்களையும் நிந்தனையையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது . "என் கிருபை உமக்கு போதுமானது" ஆம் அவருடைய பலவீனம் அவரது பலவீனத்தில் பரிபூரணமானது. அவரது விசுவாசத்திற்கு உண்மையாக  அவரை உயர்வாக வைத்தார் இறைவன். அவரை  சுவிசேஷத்தை பரப்புவதில் சிறந்த கிறிஸ்தவ கலை வல்லுனராக (கிறிஸ்தவ 🖋 எழுத்தானியாக) உயர்த்தினார்.

சுமார் 16 ஆண்டுகள் இந்திய அரசாங்கத்தின் வருமானவரித் துறையில் வேலை செய்தார் . அவர் 1975 ஆம் ஆண்டு 👨‍❤‍👨திருமணம் செய்தார். அவரது மனைவி வினோவும் வருவாய்த்துறையில் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு👬👭 இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள் உள்ளனர். இதில் மூத்த பையன் ஜோசப் தன்னுடைய அப்பாவின் இறை சேவையில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

1985ஆம் ஆண்டு சாம் ஜெபதுறை ராஜினாமா செய்து முழுநேர ஊழியராக மாறினார் . அவர் முழு நேர ஊழியத்திற்கான அழைப்புக்கு முன்பே தனது ஓய்வு நேரத்தில் இறைவனைச் சேவித்து வந்தார், 🗣தெருக்களில் பிரசங்கிப்பதன் மூலம், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து, மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளைப் பார்வையிட்டு அவர்களுக்காக 🙏ஜெபம் செய்து வந்தார்.

ஒரு நாள் மதியம், அலுவலகம் செல்லும் வழியில் இயேசு தம் முன்னால்😭 கண்ணீரோடு நிற்கும் காட்சியை கண்டார்."கடவுளே, நீ ஏன் அழுகிறாய்?" என்று கேட்டார். அதற்கு அவர், "என் மகனே, நான் பல ஆத்துமாக்கள் அறியாமையால் இருப்பதைப் பார்த்தேன் . அவர்களை ஆவிக்குரிய மன்னாவாக்க நீ செல்வாயா?" என்றார். சாம் ஜெபதுரை 💥கடவுளுடைய அழைப்பை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.  முழு நேர ஊழியத்திற்கும் தனது பணியை ராஜினாமா செய்தார்.

1977 ஆம் ஆண்டு "அவருடைய பாஸ்டர் மனைவியின்" 📒புத்தகம் வாசித்த அவர் குறிப்பாக தமிழ் மக்களும் இத்தகைய புத்தகங்களை வாசித்திருந்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று அவர் கூறினார். அப்பொழுது கர்த்தர்: நீ ஏன் அதைச் செய்யவில்லை என்று கேட்டார். "ஆண்டவரே, நான் லட்சக்கணக்கான மக்களுக்கு நற்செய்தியை பரப்ப விரும்புகிறேன் என்றார்.  நம்முடைய ஆண்டவர் மோசேயிடம் "உன்✋ கையில் என்ன இருக்கிறது" என்று கேட்டது போல் கேட்டார். (Ex 4: 2)  அதற்கு அவர்✒ ஒரு பேனா என்றார். அப்பொழுது கர்த்தர், "நான் உன்னோடு இருப்பேன், நீ என்ன செய்ய வேண்டும் என்று நான் உனக்குக் கற்றுக் கொடுப்பேன், உன் கையில் உள்ள பேனாவைப் பயன்படுத்தி உன்னை நான் மகிமைப்படுத்துவேன்" என்றார். இதுதான் நமது பேனா🖊 மனிதனின் வரலாறு.

தமிழ் கிறிஸ்துவ இலக்கியத்தில் அவரது மகத்தான பங்களிப்பு காரணமாக அவருக்கு அமெரிக்காவில் மூன்று பல்கலைக்கழகங்களில்👨🏻‍🎓 டாக்டரேட் வழங்கப்பட்டது 1. கலிபோர்னியா பல்கலைக்கழகம் செமினரி 2. சர்ச் மேலாண்மை சர்வதேச நிறுவனம், அமெரிக்கா & 3. Cornerstone பல்கலைக்கழகம், டெக்சாஸ், அமெரிக்கா.

நம்முடைய ஆண்டவர் தம் அழைப்பில் உண்மையுள்ளவர் அவருடைய மகிமைக்காக வலிமைமிக்க ஒரு சாதனமாக திகழ செய்தார். இதுவரை 750📖 புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் நம் ஆண்டவரின் கையிலிருக்கிற பொற்🖊 பேனா.

எல்லா புத்தகங்களும் நிறைய ஜெபங்களுக்கு பிறகு எழுதியிருக்கின்றார், அவற்றில் உள்ள அனைத்து வார்த்தைகளும் 🔥பரிசுத்த ஆவியானவர் மூலம் தூண்டப்படுகின்றன. அவர் புத்தகங்கள் எழுதுவதற்கான திறமைகளுடன் மட்டுமல்லாமல் சக்திவாய்ந்த பிரசங்கியாகவும் இருக்கிறார்.

பரிசுத்த ஆவியின் வல்லமை அவருடைய பிரசங்கங்களிலிருந்து கூட்டங்களில் கலந்துகொள்பவர்களிடம் மிகுந்த ஆசீர்வாதம் அளிக்கிறது. சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்படி பல✈ நாடுகளுக்கு இறைவன் அவரை அழைத்து சென்றிருக்கிறார். இதுவரை அவர் உலகம் முழுவதும் 60 நாடுகளில் சுவிசேஷம் அறிவித்து இருக்கிரார். இறைவன் இன்று அவரை விண்ணுலகம் அழைத்து சென்றார்.