Sunday, 14 July 2019

*திருநெல்வேலி திருமண்டலத்தின் தூண் : கார் மிஷனரி -Rev.E.S.Carr M.A. (1864 -1954)*


1897 முதல் 1915 வரை மாவட்ட சர்ச் கவுன்சில் தலைவர் எனும் உயர்ந்த பொறுப்பில் இருந்து சீரியபணியாற்றியவர் கார் மிஷனரி அக்கால திருமண்டல நிர்வாகத் தலைவராக இப்பதவி இருந்தது. இவரது பணிக்காலத்தில் தான் பெரும்பாலான CMS தேவாலயங்களுக்கும் CMS பள்ளிகளுக்கும் சொந்த இடங்கள் வாங்கப்பட்டன. கிரயமாக வாங்கிய இடங்களை Sale Deed என்ற தலைப்பிலும் நன்கொடையாகப் பெற்ற இடங்களை Gift Deed என்ற தலைப்பிலும் சொத்து பதிவேட்டில் சிறப்பாக வகைப்படுத்தி அதன் முழுவிபரங்களையும் அதில் பதிவுசெய்தார்.
திருநெல்வேலி திருமண்டல CMS தேவாலயம் பள்ளிகளின் சொத்து பதிவேடான CMS Tinnevelly Documents என்ற பதிவேட்டில் கார் மிஷனரி அவர்களது பெயரும் கையெழுத்தும் மிகஅதிகமாக இடம் பெற்றிருப்பதை இன்றளவும் பார்க்கலாம். இவர் 1897 ல் DistrictChurchCouncil Chairman ஆகப் பதவியேற்றபோது சபைநீக்குதல்கள், மாறுதல்கள் என சிக்கலான நிலை திருமண்டலத்தில் நிலவியது. அந்நேரம் கிறிஸ்தவ இரக்கத்தை வெளிப்படுத்தி திறமையுடன் செயல்பட்டு திருச்சபையைப் பலப்படுத்தினார். இவரது பணிக்காலத்தில் தான் நெல்லை திருமண்டல பள்ளிகளுக்கான சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டது.1899 ல் நடந்த CMS நூற்றாண்டு விழாவிலும்
1901 ல் நடந்த SPG இருநூற்றாண்டு விழாவிலும் முக்கியப் பங்காற்றினார்.
எட்மன்ட் ஸ்டைல்மன் கார் என்ற முழு பெயரைக் கொண்ட கார் மிஷனரி இங்கிலாந்திலுள்ள காஸ்டல்மன் நகரில் 06.04.1864 ல் பிறந்தார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் திரித்துவக் கல்லூரியில் M.A.பட்டம் பெற்றார். குருத்துவக்கல்வி கற்று ஆங்கிலிகன் திருச்சபை முறைப்படி 1887 ல் உதவிகுருப் பட்டம் பெற்று CMS மிஷனரியாக 1887 ல் பாளைக்கு வந்து சேர்ந்தார்.1887 முதல் 1890 வரை நற்போதக ஆசிரியராக பேராயர்.சார்ஜென்ற், கனம்.கெம்பர், கனம்.உவாக்கர் ஆகியோரோடு இணைந்து பணிசெய்தார்.1890 ல் சென்னையில் குருப்பட்டம் பெற்றார். மனைவியின் சுகவீனத்தால் இங்கிலாந்து சென்றார்.சிகிச்சை பலனின்றி மனைவி மரணமடையவே தனிமையாக  கார் மிஷனரி 1891 நவம்பரில் சென்னை திரும்பினார். 22.9.1903 ல் மிஸ்.கிளேர் டி வாக்கரைத் திருமணம் செய்தார் இருவரும் இணைந்து சிறப்புற ஊழியம் செய்தனர்.முரட்டு மீசை, கெம்பீரதோற்றம், சிறந்த தமிழ் உச்சரிப்பு கொண்ட கார் மிஷனரி சபையாரின் தேவையை அறிந்து அதை நிறைவேற்றுபவர் சபையாரிடம் அதிக அன்புகாட்டுபவர்.
புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்த மேல்நெல்லை சபைகளை அதிகம் நேசித்தவர்.
கார் மிஷனரியால் அதிகமாக நேசிக்கப்பட்ட சபைகளில் கல்லிடைக்குறிச்சி சபையும் அதிலிருந்து தனிச்சபையாக 1910 ல் உருவான தெற்கு பாப்பான்குளம் சபையும் முக்கியமானதாகும்.
இவ்விரு சபைகளிலும் தேவாலயம் கட்ட நிலம் வாங்கி சிறப்பானதோர் தேவாலயம் கட்டப்பட மூலகாரணம் ஆக கார் மிஷனரி செயல்பட்டார். கல்லிடைக்குறிச்சி சபை 40 குடும்பத்தினரையும் சுமார் 200 அங்கத்தினரையும் கொண்டதாக  இருக்கும்போது 500 பேர் அமர்ந்து ஆராதிக்கும் பெரிதானதோர் தேவாலயத்தை கார் மிஷனரி கட்டியெழுப்பினார் அதன் தூண்கள் பலமுறை சரிந்துவிழுந்தபோது சோர்படையாமல் உயர்அதிகாரிகளின் ஹண்டர்,  மன்றோ (ரயில்வே) தொழில்நுட்பஉதவி பெற்று அவற்றை நிலைப்படுத்தினார். தெற்குபாப்பான்குளத்தில் அஸ்திபாரத்திற்கு மேல் தேவாலயம் எழும்பாதபடிக்கு தடை செய்த சிங்கம்பட்டி ஜமீன்தாரிடம் நேரில் சென்று பேசி ஜமீன்தாரே தேவாலயப்பணிக்கு பனங்கம்புகளும் ஓடுகளும் தரும் அளவிற்கு அவரிடம் மாறுதலை கார் மிஷனரி உருவாக்கினார். இவ்விரு ஊர் சபையார் தம் திருச்சபையின் தந்தையாக இவரைப் போற்றுகின்றனர்.
1915 ல் இங்கிலாந்து சென்ற கார் மிஷனரி 1918 ல் CMS ல் இருந்து ஓய்வு பெற்று அங்கு பிற ஊழியங்களில் ஈடுபட்டார். 12.06.1954 ல் தம் 90 ஆம் வயதில் கர்த்தருக்குள் நித்தரையடைந்தார்.

No comments:

Post a Comment