Sunday 14 July 2019

*ஆசிர்வதியும் கர்த்தரே-* * *பாடல் பிறந்த கதை*

இப்பாடல் ஒலிக்காத கிறிஸ்தவ திருமணங்களே இல்லை எனலாம். பிரசித்திப் பெற்ற அதே நேரத்தில் அர்த்தச் செறிவுள்ள இப்பாடல் தோன்றிய வரலாறு.

1924 ஆம் ஆண்டிலே, இந்திய மிஷனெரி சங்கத்தின் *(IMS)* முதல் மிஷனெரியும் பல கீர்த்தனைகளை இயற்றியவருமான *அருள்திரு சாமுவேல் பாக்கியநாதன்* ஐயரவர்களின் *மகன் ஆடிட்டர் அசரியா பாக்கியநாதன்* அவர்களுக்கு,  சென்னை தூய எப்பா பள்ளியில் ஆசிரியையாக பணிகொண்டிருந்த *யுனிஸ்* அவர்களை திருமணம் செய்ய நிச்சயக்கப்பட்டது. மணமகளின் தகப்பனார் *அருள்திரு. டி. எஸ்.டேவிட்* ஐயரவர்கள் ஊழியம் செய்துகொண்டிருந்த பண்ணைவிளை ஆலயத்திலே திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. மணமகனின் உறவினர்கள் மருதகுளத்திலிருந்து பண்ணைவிளை வந்திருந்தார்கள்.

திருமணத்திற்கு முந்தைய நாள் மதியம் மணமகனின் உறவினர்கள் பண்ணைவிளை வரும் வழியிலே பெருங்குளத்தில் தங்கி ஓய்வு எடுத்தார்கள். அந்த குளம் உயர்சாதியினர் மட்டுமே குளிக்கக் கூடிய குளம் என்பதை அறியாத அவர்கள் அதில் குளித்தார்கள். இதை அறிந்த அவ்வூரைச் சேர்ந்த உயர்சாதியினர்  மணமகனின் உறவினர்களைச் சூழந்து கொண்டு பிரச்சனை செய்ய ஆரம்பித்தார்கள். அவர்களை விட தாழ்ந்த சாதியினரான மணமகனின் உறவினர் குளித்ததால் குளம் தீட்டுப்பட்டு விட்டதாகவும்,  அதனால் அவர்களின் விக்கிரகங்களை அதில் குளிப்பாட்ட இயலாது என்பதும் அவர்களின் குற்றச்சாட்டு. சிலமணி நேரங்களுக்குப் பிறகு இதைக் கேள்விப்பட்ட உள்ளூர் கிறிஸ்தவர்கள் எப்படியோ மணமகனின் வீட்டாரை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

இச்செய்தி மணமகனின் தந்தை அருள்திரு. சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்கள் காதை எட்டியபோது ஜனங்களின் மனக்கண்கள் சாத்தானால் குருடாக்கப்பட்டிருப்பதை நினைத்து வருந்தினார். வீசிரோ வான ஜோதி கதிரிங்கே (இருளிலே நடக்கிற ஜனங்கள் வெளிச்சத்திலே நடக்கும்படி உம் ஒளியை வீசச் செய்வீராக) என்னும் வரியை மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டிருந்தார். அன்றைய நாள் சாயங்காலத்திலேயே முழுப்பாடலையும் எழுதி மறுநாள் மகனின் திருமணத்தில் பாடினார்கள்.

ஒவ்வொரு முறையும் இப்பாடலைப் பாடும் போது, நம்முடைய வாழ்வின் இருளை நீக்க, உலகின் ஒளியாக வந்த இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற பாரத்துடன் எழுதப்பட்டதை நினைவு கூறுவோம்.

இது சகோதரர் Prason Christopher Robin அவர்களின் ஆங்கில கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.
- R.Stanly Samuel.
🙏🏼

1 comment:

  1. அருமையான பதிவு.... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

    ReplyDelete