*முதல் சீர்திருத்த (பிராட்டஸ்டன்ட்) கிறிஸ்தவ நாடார்*
*உயர்திரு. தாவீது சுந்தரானந்தம் (1772-1806)*
*தென்தமிழக்தின் முதல் சீர்திருத்த கிறிஸ்தவ இரத்தசாட்சி*
தாவீது சுந்தரானந்தம் அவர்களுடைய இயற்பெயர் சின்னமுத்து. இவர் திருநெல்வேலி மாவட்டத்தில்
சாத்தான்குளம் மற்றும் முதலூர் க்கு இடையே உள்ள காலன்குடியிருப்பு
என்ற கிராமத்தில் 1771 ம் ஆண்டு மே மாதம் முதலாம் நாள். பிறந்தார்.
இவருடைய பெற்றோர் கருப்பட்டி வியாபாரம் செய்து வந்தார்கள்.
சின்னமுத்துவுக்கு
8 வயதாக இருக்கும்போது ஏற்பட்ட வைசூரி நோயினால் இவருடைய பெற்றோர்கள் மரித்துப்போனார்கள். ஆகவே சின்னமுத்தும் அவர் சகோதரியும் விஜயராமபுரத்தில் இருந்த இவர்களுடைய தாய்மாமா வீட்டில் இருந்து வளர்ந்து வந்தார்கள்.
சின்னமுத்து இளம் வயதிலேயே மிகவும் புத்திகூர்மை மிக்கவராய் இருந்தார். பல காரியங்களை கற்றுக்கொள்வதில்
ஆர்வம் காட்டினார்.
நாட்டு வைத்தியம், ஜோதிடம், சிலம்பம் ஆடுதல், மற்றும் மல்யுத்தம் போன்றவற்றை கற்றுக்கொண்டார்.
சின்னமுத்து 17 ஆம் வயதாக இருக்கும்போது இவருடைய செயல்பாடுகள் அவருடைய அத்தைக்கு பிடிக்கவில்லை.
ஒருமுறை இவருடைய அத்தை கொடுத்த வேலையை செய்ய தவறியதற்க்காக தயிர் கடையும் மத்தால் இவரை விரட்டி விரட்டி அடித்ததினால் அவமானத்தையும் வருத்தத்தையும் அடைந்தார் மேலும் அதைத் தாங்க முடியாமல் விஜயராமபுரம் கிராமத்தைவிட்டு வெளியேறி சாத்தான்குளம் வரை நடந்துசென்று அங்கிருந்து இராஜபாளையத்திற்கு கருப்பட்டி ஏற்றி சென்று கொண்டிருந்த மாட்டு வண்டியில் பிரயாணப்பட்டு, ராஜபாளையம் சென்றார் பின்னர் அங்கிருத்து தஞ்சாவூருக்கு சென்றார்.
தஞ்சாவூர் சென்றடைந்த சின்னமுத்து அங்கு ஒரு கடையில் வேலையாளாக சேர்ந்தார்.
அப்பொழுது ஒரு நாளில் சந்தையில் நின்று நற்செய்திபணி செய்துகொண்டிருந்த குருவானவர் கிறிஸ்டியான் பிரடெரிக் சுவாட்ஸ் ஐயர் அவர்களின் நற்செய்தி பணியினால் கவரப்பட்டார். ஆகவே அவரிடம் நல்ல தொடர்பு ஏற்பட்டது. சுவாட்ஸ் ஐயர் மூலம் இயேசு கிறிஸ்துவைப்பற்றி கேள்விப்பட்டு பின்னர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு
1790 ம் ஆண்டு தாவீது சுந்தரானந்தம் என்ற பெயரில் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார். இவர்தான் திருநெல்வேலி பகுதியில் நாடார் குலத்தை சேர்ந்த முதல் சீர்திருத்தக் (பிராட்டஸ்டன்ட்)கிறிஸ்தவர் ஆவார்.(ஏற்கனவே நாடார்கள் மத்தியில் புனித சவேரியார் அவர்கள் மூலமாகவும்,
தத்துவ போதகர் தந்தை.இராபர்ட் டி நொபிலி அவர்கள் மூலமாகவும் புனித அருளானந்தர் என்றழைக்கப்படும் ஜான் டி பிரிட்டோ அவர்கள் மூலமாகவும் வீரமாமுனிவர் என்றழைக்கப்பட்ட ஜோசப் பெஸ்கி அவர்கள் மூலமாகவும் நாடார் சமூகத்தினர் கத்தோலிக்க கிறிஸ்துவத்தை ஏற்றிருந்தனர் காமநாயக்கன்பட்டி
கயத்தாறு
வடக்கன்குளம் சொக்கன்குடியிருப்பு சோமநாத பேரி போன்றவை பதினாறாம் பதினேழாம் நூற்றாண்டிலேயே கத்தோலிக்க கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொண்ட முக்கியமான நாடார் கிராமங்கள் ஆகும்)
தாவீது சுந்தரானந்தம் விசுவாசத்தில் பலப்பட்டு கிறிஸ்துவுக்கு நல்ல போர் சேவகனாய் செயல்பட தன்னை அற்பணித்தார். சுவாட்ஸ் ஐயர் தான் செல்லும் இடமெல்லாம் தாவீது சுந்தரானந்தத்தை அழைத்து செல்வார்.
இந்நிலையில் திருநெல்வேலி பகுதியில் குளோரிந்தா அம்மையார் அவர்களது நற்செய்திபணி மூலமாக அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்க. கிறிஸ்தவர்களை விசுவாசத்தில் பலப்படுத்த ஒரு சபை உபதேசியாரை திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்குமாறு குளோரிந்தா அம்மையார் தஞ்சாவூரில் நற்செய்திபணி செய்து கொண்டிருந்த சுவாட்ஸ் ஐயருக்கு கடிதம் எழுதினார்கள்.
ஆகவே சுவாட்ஸ் ஐயர் அவர்கள் 1796 ம் ஆண்டு திருநெல்வேலி பகுதிக்கு உபதேசியார் திரு. கற்பகம் சத்தியநாதன் அவர்களோடு, தாவீது சுந்தரானந்தத்தையும் பாளையங்கோட்டைக்கு அனுப்பி வைத்தார்கள்.
இந்நிலையில் 1796 ம் ஆண்டு பாளையங்கோட்டையில் குளோரிந்தா அம்மையாரின் தலைமையில் நற்செய்திபணி செய்து கொண்டிருந்த தாவீது சுந்தரானந்தம் தான் வளர்ந்த விஜயராமபுரத்திற்கு உறவினர்களை காண வந்தார்.
தாவீது சுந்தரானந்தம் நாகரிகமான ஆடை அணிந்து கம்பீரமாக நடந்து சென்றதை கண்ட அவரது உறவினர்கள் இவரை ஒரு அரசாங்க அதிகாரி என்று முதலில் நினைத்தனர். அப்போது மரித்து விட்டார் என்று கருதப்பட்டு வந்த நிலையில் தாவீது சுந்தரானந்தம் என்ற சின்னமுத்து வீடு திரும்பியது கண்டு அவருடைய உற்றார் உறவினர்கள் யாவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள்.
தாவீது தன்னுடைய விபரத்தை சொன்னவுடன் அவருடைய தாய்மாமாவும் அத்தையும் அளவு கடந்த மகிழ்ச்சியுடன் இவரை கட்டி தழுவிக்கொண்டார்கள்.
தாவீது சுந்தரானந்தம் அவருடைய சொந்தக்காரர்களுக்கெல்லாம் கிறிஸ்துவின் நற்செய்திபணியை முதலில் அறிவித்தார். இதனால் விஜயராம புரத்தில் இவருடைய நான்கு சொந்தகார குடும்பத்தினரை சேர்ந்த 18 பேர்கள் பதனீர் காலம் முடிந்த பின்னர் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
ஆகவே இவர்கள் ஆண்டவரை ஆராதிக்க பனை ஓலையினால் கூரை செய்யப்பட்ட ஆலயம் கட்டப்பட்டது.
விஜயராம புரத்தில் குளோரிந்தா அம்மையார் மூலம் ஒரு பள்ளிக்கூடமும் ஆரம்பிக்கப்பட்டது. சாத்தான்குளம் நகரை அடுத்த விஜயராமபுரத்திலிருந்து தான் கிறிஸ்தவ சமயம் திருநெல்வேலி நாடார் இன மக்கள் மத்தியில் பரவியது.
தாவீது சுந்தரானந்தம் அவர்கள் சாத்தான்குளத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நற்செய்திபணி செய்ய ஆரம்பித்தார். இதனால் பலர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். இதனால் 1797 ம் ஆண்டு அக்டோபர் மாதம்
சண்முகபுரத்தை சேர்ந்த 40 பேருக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. ஆகவே அவர்கள் ஆண்டவரை ஆராதிப்பதற்கு சண்முக புரத்தில் பனை ஓலை மூலமாக கூரை அமைத்து ஆலயம் ஏற்படுத்தப்பட்டது.
கிபி 18 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சாதிப் படிநிலையில் குறைவாகக் கருதப்பட்ட நாடார் குலத்திலிருந்து நற்செய்திபணியை பறைசாற்ற கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்ட தாவீது சுந்தரானந்தம் சாத்தான் குளம் பகுதியில் உபதேசியாராக சுவாட்ஸ் ஐயர் மூலம் நியமிக்கப்பட்டார். இவர்தான் நாடார் குல மக்களின் முதல் சீர்திருத்தக் கிறிஸ்தவ உபதேசியார்.
தாவீது சுந்தரானந்தன் உபதேசியார் திருநெல்வேலியின் தென் கிழக்கு பகுதியான சாத்தான்குளம், திசையன் விளை, உவரி,
குலசேகர பட்டினம், தென்திருப்பேரை,
ஆழ்வார் திருநகரி ஆகிய இடங்களில் நற்செய்தியைப் அறிவித்தார். இதன் விளைவாக அநேகர் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். அனைத்து இடங்களிலும் சிறிய ஆலயங்கள் கட்டப்பட்டன.
இந்நிலையில் தாவீது சுந்தரானந்தம் அவர்களின் நற்செய்தி பணியினால் நாடார் குலத்திலிருந்து அநேகர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். இவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த இந்துமத பூசாரிகள் தங்கள் கடும் எதிப்பை வெளிப்படுத்தினார்கள். ஆகவே விஜயராமபுரம், சண்முகபுரம், சந்திரராயர் புரம், சாமிதோப்பு,
தட்டார்மடம் போன்ற பல கிராமங்களில் ஏற்படுத்தப்பட்ட ஆலயங்களை தீயிலிட்டு கொளுத்தினார்கள். கிறிஸ்தவர்கள் கிராமங்களில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். கிறிஸ்தவர்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள். கிறிஸ்தவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டது.
அநேகர் கிறிஸ்தவர்களுக்கு விவசாய வேலைகள்,
பனை ஏறும் வேலைகள், கருப்புகட்டி வியாபாரங்கள் செய்வது எல்லாம் மறுக்கப்பட்டது. கிறிஸ்தவர்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் உத்திரவாதம் இல்லாமற் போயிற்று.
இந்நிலையில் கிறிஸ்தவர்கள் உபத்திரவங்களில் இருந்து ஒதுங்கி இருந்து நிம்மதியாய் வாழ விரும்பினார்கள்.
இந்நிலையில் கிறிஸ்தவர்கள் பாதுகாப்பாய் இருக்க ஒரு ஆங்கிலேய இராணுவ அதிகாரி எவரெஸ்ட் என்பவரின் பண உதவியினால் சாத்தான் குளத்தில் இருந்து சில மைல் தொலைவில் இருந்த அடையல் கிராமத்தின் அருகே தரிசு நிலமாக இருந்த நிலத்தை வாங்கி, அங்கு சாத்தான்குளம் சுற்று வட்டாரத்தில் துன்பப்பட்ட கிறிஸ்தவர்கள் குடியேற்றப்பட்டார்கள். அவர்களுக்கு என ஒரு சிறிய ஜெப ஆலயமும் அங்கே கட்டப்பட்டது.
அங்கே குடிநீருக்கு என ஒரு கிணறும் தோண்டப்பட்டது. 1799 ம் ஆண்டு கிறிஸ்தவர்கள் விஜயராம புரம் மற்றும் சண்முக புரத்தை விட்டு வெளியேறி சுமார் 28 குடும்பங்கள் அந்த இடத்தில் வீடுகளை கட்டி குடியேறினார்கள். இது முற்றிலும் கிறிஸ்தவர்கள் அடங்கிய முதல் ஊர் என்பதினால் தாவீது சுந்தரானந்தம் அவர்களின் விருப்பப்படி
*முதலூர்*
என்று அதற்கு பெயரிடப்பட்டது.
இது கிறிஸ்தவர்களுக்கு ஒரு அடைக்கலப்பட்டணமாக இருந்தது.
1800 ல் முதலூரில் கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை 200 ஆக உயர்ந்தது.
தாவீது சுந்தரானந்தம் முதலூரின் உபதேசியாராக இருந்து நற்செய்திபணி செய்து வந்தார்.
அவருடைய சொல்லும், செயலும், ஜனங்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் நாடார் குல மக்கள் அநேகர் மந்தை மந்தையாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள்.
1801 ம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் ஆங்கிலேய படை வீரர்களுக்கும் கட்டப்போம்மன் படைவீரர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்றது. சண்டையின் விளைவாகவும், இந்துமத பூசாரிகளின் தூண்டுதலின்படியும் கட்டப்பொம்மனின் படை வீரர்கள் முதலூர் வந்து கிறிஸ்தவர்களை தாக்கி அவர்கள் வீடுகளை தீக்கிரையாக்கினார்கள். அநேகர் கொல்லப்பட்டார்கள். முதலூர் ஆலயமும் தீக்கிரையானது. இவற்றையெல்லாம் கிறிஸ்தவர்கள் சகித்துக்கொண்டார்கள்.
இந்நிலையில் இந்துமத பூசாரிகள் பொது மக்கள் மீது கொடுத்த கெடுபிடிகள், நெருக்கடிகள், அநியாய வரி விதிப்புகள், கூலி கொடுக்காமல் வேலை வாங்குதல், கொடுமைகள், வேதனைகள் மத்தியிலும் பலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள்.
1802 ம் ஆண்டு ஏப்ரல் முதல் 1803 ம் ஆண்டு ஜுன் மாதத்திற்கு இடையே 70 கிராமங்களை சேர்ந்த 5382 பேர்
*குருவானவர் கற்பகம் சத்தியநாதன்*
மூலம் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்கள்
இது மாபெரும் மக்கள் திரலெழுப்புதல் ஆகும்.
இதற்கென பெரும் முயற்சி மேற்கொண்டவர் தாவீது சுந்தரானந்தர் அவர்களே அதில்.
90 சதவீதத்திற்கும் மேல் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதில் 66 பேர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
இக்கால கட்டத்தில் நாடார் இன மக்கள் மத்தியில் மாபெரும் எழுப்புதல் உண்யிற்று. இதில் தாவீது சுந்தரானந்தத்தின் பங்கும் செயல்பாடும் மிகஅதிகமாக இருந்தது. திருச்சபை வளர்ந்து பெருகியது.
1802 ம் ஆண்டு முதல் கிறிஸ்தவர்களின் பாதுகாப்புக்கு என்று அநேக அடைக்கல பட்டணங்கள் உருவாக்கப்பட்டது. இவற்றில் முக்கியமானது சாயர்புரம்,
நாசரேத்,
சமாரியா(திசையன்விளை)
பெத்லகேம்,
எருசலேம்(பள்ளி பத்து)
கிறிஸ்டியாநகரம்(உடன்குடி)
ஆகியவை.
கனம். ரேனியஸ் ஐயர் அவர்கள் காலத்திலும் அநேக இடங்களில் துன்பப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக கிறிஸ்தவ மிஷன் கிராமங்கள் உருவாக்கப்பட்டன
கடாட்சபுரம்,
அன்பின்நகரம், சுவிசேஷபுரம்
டோனா ஊர்,
நல்லூர் போன்ற 25 கிறிஸ்தவ குடியேற்ற கிராமங்கள்
கனம் ரேனியஸ் ஐயர் அவர்கள் காலத்தில் உருவானவை.
இந்துமத பூசாரிகள் கிறிஸ்தவர்களை எந்த அளவு ஒடுக்கினார்களோ அந்த அளவு கிறிஸ்தவர்கள் பெருகினார்கள். ஆயினும் இந்துமத பூசாரிகள் கிறிஸ்தவர்களின் அடைக்கல பட்டணங்களுக்குள்
புகுந்து 1803 ம் ஆண்டு மே மாதம் 22 ம் நாள் முதலூர் உட்பட பல கிறிஸ்தவ கிராமங்களில் கட்டப்பட்டிருந்த ஆலயங்களை தீக்கொளுத்தி, கிறிஸ்தவர்களின் வீடுகளை தீக்கிறையாக்கப்பட்டது.
பல கிராமங்கள் சூறையாடப்பட்டது. பல இன்னல்கள் மத்தியிலும் கிறிஸ்தவர்கள் பின்வாங்காமல் விசுவாசத்தில் உறுதியாய் நின்றார்கள். அவர்களை தாவீது சுந்தரானந்தம் தைரியப்படுத்தினார். ஆயினும் கிறிஸ்தவர்களுக்கு நேரிட்ட துன்பம் அதிகமானது.
தாவீது சுந்தரானந்தத்தால் அநீதியை தொடர்ந்து பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே கிறிஸ்தவர்களை பாதுகாக்கவும், தற்காத்துக்கொள்ளவும் *தடிக்கம்புகாரர் கிறிஸ்தவ இளைஞர் சேனை* என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுக்கு தற்காப்பு கலையான சிலம்பம் மற்றும் மல்யுத்தம் போன்ற கலைகளையும் கழியல் ஆட்ட கலையையும்
கற்றுக்கொடுத்தார்.
இதில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இருந்த அநேக இளைஞர்கள் உபதேசியாருடன் சேர்ந்து கொண்டார்கள். இவர்கள் எங்கெங்கெல்லாம் கிறிஸ்தவர்கள் இந்துமத பூசாரிகள் மூலம் தாக்கப்பட் டார்களோ அங்கு *தடிக்கம்புகாரர் கிறிஸ்தவ இளைஞர் சேனை*
விரைந்து சென்று கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து விட்டு திரும்பினார்கள்.
சபை ஊழியர் தாவீது சுந்தரனாரின் இத்தகைய செயலால் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் சில காலம் குறைந்தது.
தாவீது சுந்தரானந்தம் அவர்களின் இந்த நடவடிக்கைககள் கிறிஸ்தவ அன்பை வெளிக்காட்டாத படியினால், இந்த செயல்பாடுகள் கிறிஸ்தவ மிஷனெரிகளால் மிகவும் விமர்சனத்திற்குள்ளானது.
SPCK மிஷனரி ஊழியத்தின் பொறுப்பு குருவாக அந்நேரம் நியமனம் பெற்று தென் தமிழகத்திற்கு வந்த மிஷினரி திங்கல் தொகை அவர்களிடம் தாவீது சுந்தரானந்தம் அவர்கள் மீது பொறாமை கொண்ட சிலர் அவரது தடிக்கொம்பு சேனை குறித்தும் அவரது வேகமான செயல்பாடுகள் குறித்தும் தவறாக கூறினார்கள் நிலைமையை விரிவாக ஆராய்ந்து நிதானமாக முடிவு எடுக்காமல்
மிக அவசரமாக ரிங்கல் தோபே அவர்கள் முடிவெடுத்து தாவீது சுந்தரானந்தம் உபதேசியார் அவர்களை மிஷன் உபதேசியார் பொறுப்பிலிருந்து பணிநீக்கம் செய்து விட்டார்கள்.
மிஷனரி ரிங்கள்தௌபே அவர்கள் அவசரமாக எடுத்த இந்தப் பணிநீக்க முடிவு எதிரிகளுக்கு பேரானந்தத்தை கொடுத்ததோடு தாவீது சுந்தரானந்தத்தை அவர்கள் கொலை செய்வதற்கும் வாய்ப்பாக அமைந்துவிட்டது
தாவீது சுந்தரானந்தத்தின் துணிச்சல், மக்களிடம் அவர் காட்டிய பரிவு, மனித நேயம் மற்றும் கிறிஸ்தவர்களின் உரிமைகளை நிலைநாட்ட அவர் எடுத்த முயர்ச்சிகள் அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு முழு காரணமாயும் இருந்தது.
முதலூரின் சுற்றுபுரத்தில் இருந்த இந்துமத பூசாரிகள் இந்த தடிக்கம்புக்காரர் கிறிஸ்தவ இளைஞர் குழுவிற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினார்கள். ஆகவே அவர்கள்
மிஷன் உபதேசியார் பணியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இருந்த தாவீது சுந்தரானந்தத்தை கொலை செய்வதற்கு சதி திட்டம் தீட்டினார்கள். இந்நிலையில் பெத்லகேம் என்ற கிராமத்தில் நடைபெற இருந்த பண்டிகைக்கு தாவீது சுந்தரானந்தம் சென்றார். அப்பொழுது சில தந்திரக்காரர்களின் நயவஞ்சகமான சூழ்ச்சியினால்
தாவீது சுந்தரனந்தம் அவர்கள் உண்ணும் உணவில் விஷம் வைத்து கொடுக்கப்பட்டது.
இதை அறியாமல் உணவு உட்கொண்ட தாவீது சுந்தரானந்தம்,
1806 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ம் நாள் பெத்லகேம் என்ற கிராமத்தில் 34 ம் வயதில் அகால மரணமடைந்தார். தாவீது சுந்தரானந்தம் சாதிக்கொடுமை, பொறாமை மற்றும் சமய சகிப்பின்மை ஆகிய கொடுமைகளுக்கு பலியானார்
தென் தமிழக சீர்திருத்த கிறிஸ்தவத்தின் முதல் இரத்த சாட்சியானார்
தாவீது சுந்தரானந்தம் அவர்கள் தான் கிறிஸ்தவத்தில் நாடார் குலத்தில் இருந்து கிறிஸ்துவுக்காய் வைராக்கியமாய்
எழுந்த முதல் சீர்திருத்தக்கிறிஸ்தவர் மற்றும் முதல் உபதேசியார் ஆவார். இதைப்போல திருநெல்வேலி கிறிஸ்தவத்தின் *முதல் இரத்த சாட்சியும்*
இவரே.
அப்படியே திருநெல்வேலி கிறிஸ்தவத்தில், *தடிக்கம்புகாரர் கிறிஸ்தவ இளைஞர் சேனை* என்ற அமைப்பை ஏற்படுத்தியவரும் இவரே.
தாவீது சுந்தரானந்தம் அவர்கள்
*முதலூரின் தந்தை* என்று அழைக்கப்படுகின்றார். இவருடைய நற்செய்தி பணியை நினைவுகூறும் படி தூத்துகுடி-நாசரேத் திருமன்டலத்தில்
*தாவீது சுந்தரானந்தம் சபை மன்றம்* உருவாக்கப்பட்டு 80 திருச்சபைகளுக்கு அது பொறுப்பாக உள்ளது.
இவர் கற்றுக்கொடுத்த சிலம்பம்,
களியல் ஆட்டம்
ஆகியவை இன்றளவும்
முதலூரில் சிறப்பாக நடைபெறுகின்றது.
தாவீது சுந்தரானந்தம் அவர்களை நன்றியோடு நினைவு கூறுவோம்.