Sunday 13 January 2019

ராபர்ட் கால்டுவெல் (1814-1891)

கால்டுவெல் (1814-1891) என்று அழைக்கப்படும் ராபர்ட் கால்டுவெல் அவர்கள் திராவிட மொழி நூலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையதே.

இளமைக் காலம்:
இவர் 1814 ஆம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப் பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது லண்டன் மிஷனரி சொசைட்டி என்னும் கிறிஸ்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று 1838 ஜனவரி 8 ஆம் தேதி சென்னைக்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார். பின்னர் இவர் நற்செய்தி பரப்புவதற்கான சபை (Propagation of the Gospel Mission) எனும் குழுவினருடன் இணைந்து கொண்டார். தனது பணிக்குத் தமிழ் மொழி அறிவு முக்கியம் என்பதை உணர்ந்த கால்டுவெல், தமிழை முறைப்படி பயிலத் தொடங்கினார்.

மொழியியல் ஆய்வுகள்:
1841ல் குரு பட்டம் பெற்றுத் திருநெல்வேலி சென்று அங்கே இடையன்குடி என்னும் ஊரில் தங்கி 50 ஆண்டுகள் தமது மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார்.இவர் ஆங்கில மொழியில் ஆக்கிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் உலகெங்கும் இவருக்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் எல்லாம் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதை இந் நூல் மூலம் உலகம் ஒப்ப விளக்கிச் சொன்னார். திராவிட மொழிக் குடும்பம் ஒன்று இருப்பது பற்றிக் கண்டு பிடித்தது இவரல்ல எனினும், அதற்கான சான்றுகளை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தியவர் இவரே.”

வரலாற்று ஆய்வுகள்:
திருநெல்வேலியில் பணியாற்றிய காலத்தில் அதன் வரலாறு பற்றி ஆய்வுகள் செய்துள்ளார். தகவல் சேகரிப்புக்காகச் சங்க இலக்கியங்களின் ஏட்டுப் பிரதிகளைப் படித்தது மட்டுமன்றி, அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுப் பல பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும், ஈமத் தாழிகள், நாணயங்கள் முதலானவற்றையும் வெளிக் கொணர்ந்துள்ளார். மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பாண்டிய நாட்டுக் காசுகள் பல இவ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. இந்த ஆய்வுகளின் பெறுபேறாக “தின்னவேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு (A Political and General History of the District of Tinnevely) என்னும் நூலை எழுதினார்.
இது 1881 ஆம் ஆண்டில் மதராஸ் அரசினால் வெளியிடப்பட்டது. இது பற்றிக் குறிப்பிட்ட ராபர்ட் எரிக் ஃபிரிக்கென்பர்க் (Robert Eric Frykenberg) என்பார், தொல்லியல், கல்வெட்டியல், இலக்கியம் ஆகிய மூலங்களிலிருந்தான தகவல்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் தனி நூல்களுள் முழுமைத் தன்மையில் முதன்மையானது என்றார்.

கால்டுவெல் இயற்றிய தமிழ் நூல்கள்:
¶நற்கருணை தியான மாலை (1853)
¶தாமரைத் தடாகம் (1871)
¶ஞான ஸ்நானம் (கட்டுரை)
¶நற்கருணை (கட்டுரை)
உலக வரலாற்றை மாற்றியமைத்ததில் நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.
காரல்மார்க்சின் மூலதனம் எனும் நூல் அவ்வகையில் அனைவராலும் போற்றப்படும்நூலாக உள்ளது. அதுபோலத் தமிழக வரலாற்றில் – தமிழ் வரலாற்றில் மிகப்பெரும்மறுமலர்ச்சியை உண்டாக்கிய நூல் எனில் அது இராபர்ட் கால்டுவெலின் “திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம்’ எனும் நூலாகும். அந்த நூலையும் அதன் ஆசிரியரானகால்டுவெல்லையும் மதிப்பதற்குக் காரணம் தமிழர்களின் உள்ளத்திலும், உலகஅளவில் தமிழ்பற்றி ஆராய்ந்த அறிஞர்களின் உள்ளத்திலும் புதிய வெளிச்சத்தைஅந்நூல் பாய்ச்சியமையே ஆகும்.
வடமொழியைத் “தேவ பாஷை’ எனவும் தமிழை “நீச்சபாஷை’ எனவும் தாழ்த்தி, தமிழ் இலக்கியங்கள் யாவும் வடமொழி வழிவந்தவை என நேராகவும் உரைகளின் வழியாகவும் வடமொழிச் சார்பாளர்கள் பதிவு செய்தனர். இக்காலகட்டத்தில் தமிழர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி மொழித்துறையிலும், அரசியல் துறையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நூல் கால்டுவெலின் ¶திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ( 1856, 1875 ) எனும் நூல் ஆகும்.தமிழ்மொழி மிகச்சிறந்த செவ்வியல் மொழி எனவும் தமிழ்ச்சொற்கள் செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீனில் இடம்பெற்றுள்ளன எனவும் தமிழ்மொழியிலிருந்து பிறந்தவையேதெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மொழிகள் எனவும் இவையாவும் ஒரேகுடும்பத்தைச் சார்ந்தவை எனவும் திராவிட மொழிகளைத் திருந்திய மொழிகள்திருந்தாத மொழிகள் என இருவகைப்படுத்தியும் தம் ஆய்வு முடிவுகளைக் கால்டுவெல் வெளிப்படுத்தியவர். தமிழ் வடமொழியின் துணையின்றித் தனித்துஇயங்கும் ஆற்றல் உடையது என அழுத்தம் திருத்தமாகச் சான்று காட்டிநிறுவியவர். இதுநாள் வரை தமிழ்ப்பகைவரால் தமிழ் மீது பூசி மெழுகியிருந்த அழுக்குகளைத் துடைத்துப் பளிச்செனத் தமிழின் பெருமையை ஒளி பெறச்செய்ததால்கால்டுவெல் பெருமகனாரைத் தமிழ்உலகம் என்றும் போற்றக் கடமைப்பட்டுள்ளது.

கால்டுவெல்லின் வருகை கிறித்தவ மதப்பரப்புப் பணியை அடிப்படையாகக் கொண்டது. எனினும் கால்டுவெல் தமிழகத்தில் ஏறத்தாழ 53 ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்மொழி, வரலாறு, சமூக முன்னேற்றம், சமய வளர்ச்சிக்குப் பாடுபட்டதால் அவரின் வரலாறு அனைவராலும் அறியத்தகுந்த வரலாறாக அமைந்துள்ளது. கால்டுவெல் அவர்கள்அயர்லாந்து நாட்டில் உள்ள “கிளாடி’ எனும் ஆற்றின்கரையில் அமைந்த சிற்றூரில்பிறந்தவர் (1814).
இளமையில் அறிவார்வம் கொண்ட தம் மகனை அழைத்துக் கொண்டுபெற்றோர் தம் தாய்நாடான ஸ்காட்லாந்துக்குச் சென்று “கிளாஸ்கோ’ நகரில்வாழ்ந்தனர். 16 ஆண்டுக்குள் ஆங்கில மொழியில் அமைந்த பல இலக்கியங்களைக் கால்டுவெல் கற்றுத் தேர்ந்தார். தம் மகனைக் கவின்கலைக் கல்லூரியில்பெற்றோர் சேர்த்தனர். ஓவியக்கலையைக் கால்டுவெல் கற்றுத்தேர்ந்தாலும் அதனைவாழ்க்கைத் தொழிலாக்கிக் கொள்ளவில்லை.

கால்டுவெல் தம் இருபதாம்அகவையில் இறைப்பணி செய்வதற்காக இலண்டன் நகரில் அமைந்த சமயத்தொண்டர்சங்கத்தில் சேர்ந்தார். அச்சங்கத்தின் சார்பாகக் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் மாணவராகச் சேர்ந்து ஐரோப்பிய மொழிகளில் அமைந்த நூல்களையும் சமய நூல்களையும் கற்றார். இதன் பயனாக இரண்டு ஆண்டுகளில் இளங்கலைப்பட்டம் பெற்றார். அவ்வாறு படிக்கும்போது கிரேக்க மொழியைப் பயிற்றுவித்த பேராசிரியர் டேனியல் ஸ்டான்போர்ட் அச்செம்மொழியின் பெருமையை மாணவர்களுக்கு நிறைவடையும்படிப் பயிற்றுவித்தார். கால்டுவெல் பெருமகனாருக்கு மொழியியலில் ஆர்வம் உண்டாக்கியது அப்பேராசிரியரின் வகுப்புரைகளே ஆகும்.

இலண்டன் சமயப்பரப்புக் கழகத்தின் சார்பாகச்சமயப் பணிக்கு என 1838ல் “அன்னமேரி’ என்னும் கப்பலில் ஏறி இந்தியாவுக்குப் பயணம் செய்தார். கடலில் பயணம் செய்தபோது இவர் ஏறிவந்த கப்பல் மீது பிரெஞ்சுகப்பல் ஒன்று மோதிச் சிதைந்தது. பலர் மடிந்தனர். சிலர் உயிர் பிழைத்தனர். பழுதுற்ற கலத்தைப் “பிளிமத்’ என்னும் துறைமுகத்தில் செப்பனிட்டனர். தென்னாப்பிரிக்கா வழியாகக் கப்பல் வரவேண்டியிருந்ததால் நான்கு மாதம் பயணம்செய்து சென்னைக்கு வந்தார். அவ்வாறு வரும்போது சி.பி. பிரெளன் என்னும் குடிமைப்பணி அதிகாரியுடன் நட்புகொண்டார். அவர் முன்பே ஆந்திராவில் பணிபுரிந்ததால் தெலுங்கு, வடமொழி அறிந்து இருந்தார். அவர் வழியாகக் கால்டுவெல் அம்மொழிகளைக் கற்றார்.
கடலில் பயணம் செய்தபோது கால்டுவெல்லுக்கு முன்பு இருந்த இருமல் நோய் நீங்கியது. கால்டுவெல் சென்னைக்கு வந்ததும் “துருவர்’எனும் தமிழ்கற்ற அறிஞரைக் கண்டு மகிழ்ந்தார். வின்சுலோ, போப், பவர், ஆண்டர்சன் முதலானவர்கள் பின்னாளில் நண்பர்களாயினர். சென்னை மாநகரில்மூன்று ஆண்டுகள் தங்கிய கால்டுவெல் ஏறத்தாழ நானூறு கல்தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு நடந்து செல்லத் தீர்மானித்தார். நடந்து செல்லும்போது மக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், மொழி முதலானவற்றை அறியலாம் எனநினைத்தார். சிதம்பரத்தில் இருந்த நடராசர் கோயிலைக் கண்டு மகிழ்ந்தார். மயிலாடுதுறை வழியாகச் சென்று தரங்கம்பாடியில் சில நாள் தங்கினார். டேனிஷ்மின் செய்யும் பணிகளை அறிந்தார். பின்பு குடந்தை வழியாகத் தஞ்சாவூர்சென்றார். பெரியகோயிலையும் மாராட்டிய மன்னர் அரண்மனையையும் கண்டுமகிழ்ந்தார். அங்கு வாழ்ந்த வேதநாயகரைக் கண்டு உரையாடினார். திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அழகையும் திருவரங்கச் சிறப்பையும் கண்டுமகிழ்ந்தார். பின்பு நீலமலை சென்றார். அங்கு ஸ்பென்சர் எனும் தந்தையாரைக்கண்டு அவரின் விருந்தினராக ஒரு மாதம் தங்கி இளைப்பாறினார்.

நீலமலையிலிருந்து இறங்கி, கோவை வழியாக மதுரை வந்தார். வரும் வழியில் மக்கள் அவரைப் பலவாறு இழித்தும், பழித்தும் பேசினர். ஒருநாள் நடந்து செல்லும்போது மழை வரத்தொடங்கியது. இரவுப் பொழுதில் தங்கிச்செல்ல நினைத்தார். சத்திரம், சாவடி உண்டா என வினவிய போது அரசின் சத்திரம் உள்ளது எனவும் அது ஆங்கிலேயர்க்கு இல்லை எனவும் கூறினர். மழையில் நனைந்து துன்பப்பட்ட கால்டுவெல்லைக் கண்டுமாட்டுத் தொழுவத்தில் தங்கும்படி சொன்னார்கள். சத்திரத்தில் இடம் கிடைக்காததாலும் மாட்டுத் தொழுவத்தில் தங்க மனம் விரும்பாததாலும் ஒருவீட்டின் திண்ணையில் தங்கி இரவுப் பொழுதைக் கழித்தார்.
மதுரை வந்தடைந்தபின்பு திருமங்கலத்தில் சமயத்தொண்டு புரிந்த திரேசியர் அவர்களைக் கண்டு உரையாடினார். பின்பு நெல்லை வழியே பாளையங்கோட்டை சென்றடைந்தார் (நவம்பர் 1841). பின்பு நாசரேத்தில் (நவம்பர் 28) தங்கி இறைவழிபாடு நிகழ்த்தி ஒரு விரிவுரையும் செய்தார். பின்பு முதலூரில் ஞாயிற்றுக்கிழமை விரிவுரையாற்று நிகழ்த்தினார். அருகில் இருந்த இடையன்குடியைப் பாதை தெரியாமல் நெடுந்தூரம்சுற்றி அடைந்தார். அந்த ஊரே அவர் பணிபுரியும் இடமாகவும், கடைசிக் காலத்தில் நிலைகொள்ளும் இடமாகவும் அமைந்தது. இடையன்குடி என்பது பெரும்பாலும் பனைமரங்கள் நிறைந்த பகுதியாகும். கூரைவீடுகளே மிகுதி. கள்ளியும் முள்ளியும் நிறைந்த பகுதி. அங்குக் கால்டுவெல் குடியிருப்புகளையும் கோயிலையும்உருவாக்கினார். எழுதவும் படிக்கவும் மக்களுக்குக் கற்றுத் தந்தார். அப்பகுதியில் வாழ்ந்த நாடார் இன மக்களைக் கல்வியறிவுப் பெற்றவராகமாற்றினார்.1847ல் அங்கு ஆலயப்பணியைத் தொடங்கி 32 ஆண்டுகளுக்குப் பிறகு 1880-இல் அப்பணி நிறைவுற்றது. சென்னை மாநில ஆளுநராக இருந்த நேப்பியார்அவர்கள் கால்டுவெல்லின் திருப்பணிகளைக் காண விரும்பி இடையன்குடியில் ஒருவாரம் தங்கினார். 500 ரூபாய் அன்பளிப்பாக வழங்கியதையும் அறியமுடிகிறது.

இடையன்குடியில் மூன்று மாதம் இளவேனில் காலமாகவும் 9 மாதம் கடும் வெப்பம் நிறைந்தகாலமாகவும் விளங்கும். இடையன்குடியில் வாழ்ந்தபோது வெப்பம் தாளாமல் கால்டுவெல் துன்பப்பட்டுள்ளார். அக்காலங்களில் தமிழ் இலக்கியங்களின் பக்கம் கால்டுவெல்லின் கவனம் திரும்பியது. திருக்குறள், சீவகசிந்தாமணி, நன்னூல் முதலிய நூல்களைக் கற்றார். உடல் வெப்பம் தணிக்க அருகே உள்ள கடற்கரையில் உவரி என்னும் காயல்பகுதிக்குச் சென்றார். உவரித்துறை பழம்பெருமை வாய்ந்ததை என உணர்ந்தார். அங்கிருந்த இளஞ்சுனையில் வெயிற்காலத்தில் தங்கி வாழ்ந்தார். கோடைக் காலங்களில் திருக்குற்றாலம், அசம்புமலை, கொடைக்கானல் மலைகளில் தங்கியிருந்துள்ளார்.

கால்டுவெல் “தமிழில் கிறித்தவ வழிபாட்டு நூல்’ உருவாக்கும் குழுக்களில் இடம்பெற்று அப்பணியைச் சிறப்புடன் செய்துள்ளார். மேலும் கிறிஸ்தவ மறைநூலை மொழிபெயர்க்கும் பன்னிருவர் குழுவில்இடம்பெற்றுத் திறம்படப் பணியாற்றியுள்ளார். கால்டுவெல் தமிழகத்தின் திருநெல்வேலி பற்றி, அயல்நாட்டவரின் குறிப்புகளைக் கொண்டு வரலாற்று நூல் எழுதியுள்ளார். பழைய ஹீப்ரு மொழியில் வழங்கும் துகி என்னும் சொல் தமிழின் தோகை என்னும் சொல்லின் திரிபு எனவும், அரிசி என்பது கிரேக்க மொழியில் அருசா என வழங்குவதையும் கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார். கொற்கைத் துறைமுகம் பற்றிய ஆய்வுகளையும் கால்டுவெல் செய்துள்ளார். கொற்கையின் அருகே இருந்த அக்கசாலை (பொற்காசு செய்யும் இடம்) என்ற ஊரின் சிறப்பு அறிந்து மகிழ்ந்தார். மேலும் கொற்கையின் அகழாய்வுப் பணியைத் தம் சொந்த முயற்சியில் செய்துள்ளார். ஆறடிக்குகீழ் மணற்பாறையும், அதன் பிறகு கடற்கரைக் குறுமணலும் கடல்சங்கும் சிப்பிகளும் மூழ்கிக் கிடந்ததை உலகிற்கு வெளிப்படுத்தினார். இன்றுள்ள கொற்கைக்கு அப்பால் 5 கல்லில் கடல் உள்வாங்கி உள்ளது என்று குறிப்பிட்டார். பழங்காயல் என்னும் ஊரையும் ஆய்வு செய்தார். இவ்வூரும் பண்டைய கடற்கரைத் துறைமுகமாக இருந்திருக்க வேண்டும் என உணர்ந்தார்.

மேலும் மகாவம்சம் முதலான நூல்களின் துணைகொண்டு ஈழத்தமிழக உறவுகளையும் கால்டுவெல் எழுதியுள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய மொழிகள் பற்றிய பல கட்டுரைகளை மேல்நாட்டு அறிஞர்கள் எழுதினர். அவ்வகையில் பழந்தமிழ்ச் சொற்களைப் பழங்கன்னடச் சொற்களோடும் பழைய தெலுங்குச் சொற்களோடும் கால்டுவெல் ஒப்புநோக்கிய போது அடிச்சொற்கள் ஒத்திருப்பதைக் கண்டார். ஏறத்தாழ 15 ஆண்டுகள் கடுமையாக உழைத்துத் தென்னிந்திய மொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை ஒப்பிட்டுத் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலைத்தந்தார். தென்னிந்திய மொழிக் குடும்பத்தில் 6 மொழிகள் திருந்திய மொழிகள் எனவும் 6 மொழிகள் திருந்தாத மொழிகள் எனவும் குறிப்பிட்டார். மேலும் வடசொற்களை அகற்றினாலும் தமிழ்மொழி வளம் குன்றாது தழைத்து இனிது வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கால்டுவெல்லின் பணிகளைக் கண்ட கிளாஸ்கோ பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. கால்டுவெல்லின் ஆய்வுகளில் மொழி ஆய்வு அனைவராலும் போற்றப்படுகிறது. அவர்தம் காலத்தில் தொல்காப்பியம் முதலான நூல்கள் பதிப்பிக்கப் படாததால் கால ஆய்வுகள் குறித்த இவர் செய்திகளில் பிழையுள்ளதை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இராபர்ட்கால்டுவெல்லின் மொழி ஆராய்ச்சிப் பணிகளை மொழி ஞாயிறு பாவாணர் அவர்கள் தம்நூல்களில் வாய்ப்பு அமையும் இடங்களில்எல்லாம் நன்றியுடன் போற்றி மதித்துள்ளார்.””திராவிடம் வடமொழிச் சாற்பற்றதென்றும், உலக முதன் மொழிக்கு மிக நெருங்கியதென்றும், வடசொல்லென மயங்கும் பலசொற்கள் தென் சொற்களேயென்றும், வடமொழியில் பல தமிழ்ச் சொற்கள் கலந்துள்ளனவென்றும், முதன் முதல் எடுத்துக்காட்டி, மொழிநூற் சான்றுகளால் நிறுவியவர் கால்டுவெல் கண்காணியரே…
இவர் தமிழ்மொழியைச் சிறப்பாய் ஆராய்ந்தது போன்றே மலையாளமொழியைச்  சிறப்பாயாராய்ந்தவர்  டாக்டர் குண்டட் ஆவர். இவ்விருவர்க்கும் திராவிடவுலகம், விதப்பாய்த் தமிழுலகம் பட்டுள்ள கடன் மாரிக்குப்பட்டுள்ளதேயெனினும் பொருந்தும் “”(ஒப்பியன் மொழிநூல், ப.84), எனவும் “….தமிழ் என்பதன் திரிபே திராவிடம் என்பது புலனாம். ஆயினும் கால்டுவெலார் இவ்வெளிய முறையில் உண்மையைக் காணாமல், இயற்கைக்கு மாறாகத் தலைகீழாய் நோக்கி, திராவிடம் என்னுஞ் சொல்லே தமிழென்று திரிந்ததாக முடிவுசெய்துவிட்டார்.” (தமிழ்வரலாறு, ப.33) எனவும் “கால்டுவெல் ஐயர் கடைப்பிடித்த கொடிவழி மொழிநூலையே கையாளல் வேண்டும்’ (த.இ.வ. ப. 48) எனவும்பாவாணர் குறிப்பிடுவார்.

கால்டுவெல் அவர்கள் 18 மொழிகளைக் கற்றவர். பல்வேறு வரலாற்று நூல்களையும் இலக்கியங்களையும் கற்றவர். சமய அறிவு நிரம்பப்பெற்றவர். எனவே தம் அறிவு முழுமையும் பயன்படுத்தி மொழி நூலையும் வரலாற்று நூலையும் சமய நூலையும் உருவாக்கித் தமிழர் உள்ளங்களில் நீங்காதஇடம் பெற்றவர். இவர் இயற்றிய திருநெல்வேலி சரித்திரம் என்னும் நூல்அக்காலத்தில் இருந்த போர்ச்சுகீசிய, டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்கள்தமிழ்நாட்டில் நிலைகொண்டு வாழ்வதற்குச் செய்த முயற்சிகளையயல்லாம்மிகச்சரியாகப் பதிவு செய்துள்ளது.அக்காலத்தில் இருந்த படைத்தளபதிகள், சமயத்தொண்டர்கள் எழுதிய மடல்கள், நூல்கள், குறிப்புகள், வாய்மொழிச் செய்திகள், அகழாய்வுச் செய்திகள் இவற்றைத் துணைக்கொண்டு வரலாற்று நூலை எழுதியுள்ளார்.

கால்டுவெல் தம் 29ஆம் அகவையில் நாகர்கோவிலில் வாழ்ந்த மால்ட் என்பவரின் மகளான எலிசா (21 அகவை) என்னும் மங்கையை மணந்தார். எலிசா ஆங்கிலமும் தமிழும் நன்கறிந்தவர். இடையன்குடியில் பெண்கள் கல்விபெற எலிசா பணிபுரிந்தவர். பிணியுற்றவர்களுக்கு மருத்துவம் பார்த்தார். எலிசா வழியாகக் கால்டுவெல்பேச்சுத் தமிழைக் கற்றார். கால்டுவெல்லுக்கு மூன்று மக்கள் எனவும் நான்கு மக்கள் எனவும் கருத்து வேறுபாடு உண்டு. அம்மக்களுள் ஆடிங்கிதன் (புddஷ்ஐஆமிலிஐ) என்பவர் மருத்துவராகப் பணிபுரிந்தவர். முதல் மகள்திருச்சியில் “வியத்தர்’ என்பவரை மணந்தாள். இளைய மகள் “லூயிசா’ ஆங்கிலப்படைவீரனை மணந்தாள். எனினும் (28-10-1872இல்) மறைந்தாள்.கால்டுவெல் வாழ்க்கை எளிமையானது. பெரும்பாலும் நடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். ஊர்களில் கிடைக்கும் காய்கனிகளை உண்டு வாழ்ந்தார். வெயில் கொடுமைக்கு அஞ்சி கூரைவீடுகளில் தங்கியிருப்பார். அமர்ந்து படிப்பார். காலை மாலை உலாவுவார். மூட்டைப்பூச்சிகளுக்கு அஞ்சி இரவில் பனைநாற்கட்டிலில் வீட்டு முற்றத்தில்உறங்குவார். பெரும்பான்மையான நாள்களில் சுற்று வட்டாரத்தில் சமயப் பணிபுரிந்து விட்டு ஏழாம்நாள் இடையன்குடி வருவார். தாம் பணி செய்த பகுதிகளில் 1877ஆம் ஆண்டு ஏற்பட்ட தாதுவருடப் பஞ்சத்தில் வாடிய மக்களுக்குப் பேருதவிசெய்தார். கால்டுவெல் தமிழகத்தில் தங்கியிருந்தபோது மூன்றுமுறை தம் நாடுசென்று வந்துள்ளார். ( 1. 1854-57, 2. 1873-75, 3. 1883-84).

கால்டுவெல்திருநெல்வேலி ஆயராக கி.பி. 1877-இல் திருநிலைப்படுத்தப் பட்டார். 1891 சனவரியில் 31-ஆம் ஆண்டு தம் பணியிலிருந்து ஓய்வுபெற்றுக் கொடைக்கானல் சென்று தங்கியிருந்தார். அக்காலங்களில் கொடைக்கானல் செல்ல சரியான பாதை வசதியில்லை. அம்மை நாயக்கனூரில் இருந்து கடும் பாறை வழியாகச் சென்றார். ஒருநாள் குளிரால் நடுக்கம் கொண்டார். ஏழாம்நாள் நோய் வலுவுற்று 1891 ஆகத்து மாதம் 28-ஆம் நாள் இயற்கை எய்தினார்.
அவர்தம் உடல் இடையன்குடிக்குக் கொண்டுவரப்பட்டு அவர் எடுப்பித்த கோயிலில் அடக்கம் செய்யப்பட்டது.

கால்டுவெல் பெருமகனார் தம்மைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“”நான் அயர்லாந்துதேசத்தில் பிறந்தேன்; ஸ்காட்லாந்து நாட்டில் வளர்ந்தேன். ஆங்கில நூல்களில் ஆழ்ந்தேன். எனினும் என்வாழ்நாளில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியப் பெருநாடும், அந்நாட்டு மக்களுமே என் கருத்தை முழுவதுமாகக் கவர்ந்து கொண்டதால் நான் இந்தியர்களுள் ஒருவனாயினேன். இந்தியர்களுள் ஒருவராக இருந்தாலும் தமிழர்களின் புதிய வரலாற்றுக்கு மூலநூல் தந்தாலும் தமிழுக்கு நான் ஒரு மாணவன்" என்றார்.

ஆகவேதான் தமிழ் பற்றிப் பேசும் பொழுதெல்லாம் கால்டுவெல் பெயரை நம் உதடுகள் ஒலிக்கும்.

1 comment:

  1. ohnjohnii@yahoo.com28 May 2019 at 20:44
    I represent a group of people who are very much interested in Apocalypse 11 and the Two Witnesses. We have found what we believe to be references to the activities of these Witnesses in other parts of the Book of Apocalypse. For instance, the two wings of a great eagle in Apocalypse 12 and in Apocalypse 14, not so much the 144,000 (those with whom the covenant of Christ's sacrifice on the Cross is being confirmed), but in verse 6, an angel flying in the midst of Heaven, the description of which matches Apocalypse 10:11; and, verse 8 matches up with Apocalypse 18 which had another angel that came down from Heaven. We also firmly believe that Daniel 9:27 about confirming the covenant also refers to one of the Witnesses along with Apocalypse 14:9~12. All these activities certainly have to do with confirming God's covenant with man and are consistent with the mandate given to the Two Witnesses. Apocalypse 10:1 talks about: "And I saw another mighty angel come down from Heaven, clothed with a cloud, and a rainbow was on his head, and his face was as the sun, and his feet as pillars of fire." This seems to match up with Apocalypse 14:9~12.

    We are in possession of a Treatise written by an Anonymous Priest entitled: "The Witnesses Are Coming!" https://sites.google.com/view/thewitnessesarehere
    We are currently awaiting the addition of three more segments to add to the five already in this document, all entitled: "Blood Moons Over Fatima" (BMOF). We would imagine that your interests would take you first to BMOF-III & BMOF-V, as they specifically have to do with the Witnesses, and then flesh that out with the other BMOF Treatises.

    We were greatly encouraged and emboldened in seeing that you were quoting from the Orthodox Catholics concerning St. John. In your writing, you seem to be a seeker of Truth wherever it is to be found. We consider ourselves also as seekers of Truth wherever it is to be found. Believe it or not, we are pre- Vatican II traditionalist Catholics who study the Bible every single day as a part of our spirituality. We only yesterday, in fact, found the Orthodox tract of the biography of St. John and this is what led us to your site. With the help of God's Grace we will leave no stone unturned in our quest to help our brothers and sisters in these last times of the first 6,000 years referred to in 2 Peter 3:8~13.

    Please do study this material and please do acknowledge receipt of this comment to johnjohnii@yahoo.com. You may also be interested in gleaning what you can from John John II's profile on Disqus. You may also be interested in our sister's profile on Disqus, "Fatima Revisited".

    ReplyDelete